இருங் கழி துழைஇய ஈர்ம் புற நாரை
இற எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து
உவன் வரின் எவனோ பாண பேதை
கொழு மீன் ஆர்கைச் செழு நகர் நிறைந்த
கல்லாக் கதவர் தன் ஐயர் ஆகவும்
வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடிய
ஈனாப் பாவை தலையிட்டு ஓரும்
மெல்லம் புலம்பன் அன்றியும்
செல்வாம் என்னும் கானலானே
பாடியவர்: சீத்தலைச் சாத்தனார்
திணை: நெய்தல்
பாடலின் பொருள்:
பாணன் தலைவனுக்காகத் தூது வருகிறான். தோழி தலைவி இருக்கும் இல்லத்திற்குள் தலைவன் வரக்கூடாது என்று தடுக்கிறாள். தலைவியின் தந்தையும் அண்ணனும் சினம் கொண்டவர்கள் என்கிறாள். தலைவி பாவை விளையாடக் கானலுக்குச் செல்கிறாள். அங்குத் தலைவன் வரலாமே என்று தோழி பாணனிடம் சொல்கிறாள். நாரை உப்பங்கழியில் நுழைந்து இரை தேடும். அப்போது நனைந்த அதன் சிறகுகளை மேட்டுக்கு வந்து உதறும். நீர்த்திவலைகள் சிதறும். நாரை இறா மீனக் கௌவப் பாயும்போது நீர்த்திவலைகள் தெறிப்பது போலச் சிறகை உதறும்போதும் நீர்த்திவலைகள் சிதறும். இப்படி நாரை சிறகை உதறும் ஊரிலுள்ள கானலுக்குச் செல்லலாம் என்று என் தலைவி பேதை சொல்கிறாள்.
முரட்டுத்தனமாக (கல்லா) சினம் கொள்பவர்கள் இவளது ஐயர் (தந்தை, அண்ணன்). முன்பு அவள் தன் தோழிமாருடன் (ஆயம்) சேர்ந்து வண்டல் விளையாடினாள். பாவை செய்து விளையாடினாள். அந்தப் பாவையைச் சாக்காக வைத்து அங்குச் செல்லலாம் என்று சொல்கிறாள். தந்திரமாக மெதுவாக கடல்நிலத் தலைவன் அங்கு வருவான். அவன் வராவிட்டாலும் செல்லலாம் என்கிறாள். அங்கு வந்தால் என்ன?