• Sat. Apr 20th, 2024

இலக்கியம்

Byவிஷா

Aug 12, 2022

நற்றிணைப் பாடல் 13:

எழாஅ யாகலின் எழில்நலந் தொலைய
அழாஅ தீமோ நொதுமலர் தலையே
ஏனல் காவலர் மாவீழ்த்துப் பறித்த
பகழி யன்ன சேயரி மழைக்கண்
நல்ல பெருந்தோ ளோயே கொல்லன்
எறிபொற் பிதிரின் சிறுபல் காய
வேங்கை வீயுகும் ஓங்குமலைக் கட்சி
மயில்அறிபு அறியா மன்னோ
பயில்குரல் கவரும் பைம்புறக் கிளியே..

பாடியவர்: கபிலர்.
திணை குறிஞ்சி

பொருள்:
தினையை அழிக்கும் பன்றி முதலிய விலங்குகளை அம்பு எய்து கொல்ல, அதன் உடலில் பதிந்த அம்பினை உருவும்போது, வரிவரியாய் இரத்தம் படந்திருப்பதைப் போல, செவ்வரி படந்த கண்களையும் நல்ல பெரிய தோளையும் உடையவளே..
உலைக்களத்தில் இரும்பை அடிக்கும் போது எழும் தீப்பொறி போல வேங்கை மரப்பூக்கள் உதிர்ந்து கிடக்கும் மலைக்காட்டில் மயில்கள் இருக்கும். இந்த மயில்களுக்குத் தெரியாமல் தினையை கொய்து செல்வதாய் கிளிகள் எண்ணி, தினையைத் திருடிப் போகும். இப்படி திருடிச்செல்லும் கிளிகளை ஓட்ட நீ எழவில்லையே.. சரி.. நீ கிளிகளைத்தான் எழுந்து ஓட்டவில்லை… போகட்டும்.. இப்படி உன் நலம் கெடும்படி அழாமல் இரு என்று தோழி, தலைவனின் பிரிவால் வாடும் தலைவியைத் தேற்றுகிறாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *