

நற்றிணைப் பாடல் 14:
தொல் கவின் தொலைய, தோள் நலம்சாஅய,
நல்கார் நீத்தனர்ஆயினும், நல்குவர்;
நட்டனர், வாழி!- தோழி!- குட்டுவன்
அகப்பா அழிய நூறி, செம்பியன்
பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிகப் பெரிது
அலர் எழச் சென்றனர் ஆயினும்- மலர் கவிழ்ந்து
மா மடல் அவிழ்ந்த காந்தள்அம் சாரல்,
இனம் சால் வயக் களிறு பாந்தட் பட்டென,
துஞ்சாத் துயரத்து அஞ்சு பிடிப் பூசல்
நெடு வரை விடரகத்து இயம்பும்
கடு மான் புல்லிய காடு இறந்தோரே.
பாடியவர் மாமூலனார்
திணை பாலை
பொருள்:
தலைவன் பொருளீட்டப் பிரிந்து சென்றுவிட்டானே என்று தோழி வருந்துகையில், விரைவில் திரும்பி வந்து அருள் செய்வான் என்கிறாள், தலைவி. தலைவனைக் குறை கூறுவதைத் தலைவி விரும்பவில்லை என்பது இதனால் புலப்படுகிறது. இப்போது என் பழைய அழகும் தொலைந்துவிட்டது. என் தோளும் இளைத்து அழகு குறைந்துவிட்டது. அவர் என்னை வந்து பார்க்கவில்லை. விட்டுவிட்டுப் போய்விட்டார். ஆயினும், அவர் என்னை வந்து சந்திப்பார். இதனை நீ புரிந்துகொள் தோழி. குட்டுவனின் அகப்பாக் கோட்டையை அழித்த செம்பியன் அதனைப் பட்டப்பகலிலேயே தீயிட்டுக் கொளுத்திய போர்ச்செய்தி நாட்டுக்கெல்லாம் தெரிந்தது போல எனக்கும் அவருக்கும் இடையே உள்ள உறவு ஊருக்கெல்லாம் தெரியும் நிலையில் அவர் விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்.
அவர் சென்றிருக்கும் புல்லி அரசன் காட்டில், காந்தள் பூ தன் மடலைக் கவிழ்த்து விரித்துக்கொண்டிருக்கும். அதனைப் பார்த்தால் நான் கவிழ்ந்துகிடக்கும் நிலையை அவர் எண்ணிப்பார்ப்பார். அத்தகைய சாரலில், வலிமை மிக்க களிறு மலைப்பாம்பின் வாயில் அகப்பட்டுக்கொள்ளக் கண்டு அஞ்சிய அதன் பிடி (பெண்யானை) தூக்கமில்லாமல் மலைப் பள்ளத்தாக்கில் பிளிறுமாம். அதனைப் பார்த்தால் என் நினைவு அவருக்கு வருமல்லவா? திரும்பி வந்துவிடுவார் அல்லவா? என்று தலைவி கூறுகிறாள்.
