
நற்றிணைப் பாடல் 12:
விளம்பழம் கமழும் கமஞ்சூற்குழிசிப்
பாசம் தின்ற தேய் கால் மத்தம்
நெய் தெரி இயக்கம் வெளில்முதல் முழங்கும்
வைகு புலர் விடியல் மெய் கரந்து, தன் கால்
அரி அமை சிலம்பு கழீஇ, பல் மாண்
வரி புனை பந்தொடு வைஇய செல்வோள்,
‘இவை காண்தோறும் நோவர்மாதேர்
அளியரோ அளியர் என் ஆயத்தோர்!’ என
நும்மொடு வரவு தான் அயரவும்,
தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே.
பாடியவர் கயமனார்
திணை பாலை
துறை தோழி உடன்போக்கு அஞ்சுவித்தது.
பொருள்:
(தலைவியை அழைத்துச் செல்வதற்காகத் தலைவன் காத்திருக்கிறான். ஆனால் தோழி வந்து, தலைவி வரவியலாமல்போனது குறித்துப் பின்வருமாறு பேசுகிறாள்…)
“சூல் கொண்ட வயிறுபோல் காணப்படும் தயிர்ப்பானையில் விளாம்பழம் கமழ்கின்றது… தயிர்ப்பானையில் இட்ட மத்தினால், தயிர் கடைய நடப்பட்ட ‘வெளில்’ என்னும் தூண் தேய்ந்து காணப்படுகிறது… வெண்ணெய் தெரியுமாறு தயிரைக் கடையும்போது பெரிய ஓசை கேட்கும்…இந்த வைகறைப் பொழுதில், தலைவனுடன் உடன்போக விரும்பித் தலைவி, பிறர் பார்த்துவிடாதபடி தன்னுடல் மறைத்து, காலிலுள்ள கற்கள் அமைந்த கொலுசைக் கழற்றி, பல அழகிய வரிகள் சேர்ந்த ஒரு பந்தில் சுற்றி, வீட்டின் ஓரத்தில் வைக்கச் சென்றவள் நினைக்கிறாள்:
‘இவற்றைப் பார்க்குபோதெல்லாம் என் ஞாபகம் வந்து நொந்துபோவார்களே! என் சொந்தக்காரர்கள் இரக்கப்படத் தகுந்தவர்கள்!’
எனவே, உன்னோடு அவளால் வரமுடியாது கண்ணீர் விடுகிறாள்.”
(இதனால் அவள் தலைவனுடன் உடன்போக முடியாது. ஆகவே தலைவியை முறையாகப் பெண் கேட்டுத் திருமணம் செய்து அழைத்துச் செல்வதே சரியானது என்று தோழி உணர்த்துகிறாள்.)
