• Wed. Dec 11th, 2024

இலக்கியம்

Byவிஷா

Feb 28, 2023

நற்றிணைப் பாடல் 124:

ஒன்று இல் காலை அன்றில் போலப்
புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை
யானும் ஆற்றேன் அதுதானும் வந்தன்று
நீங்கல் வாழியர் ஐய ஈங்கை
முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர்
நவ்வி நோன் குளம்பு அழுந்தென வெள்ளி
உருக்குறு கொள்கலம் கடுப்ப விருப்புறத்
தெண் நீர்க் குமிழி இழிதரும்
தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே

பாடியவர்: மோசி கண்ணத்தனார்
திணை: நெய்தல்

பொருள்:

இருவரும் ஒன்றுபட்டு வாழாத காலத்தில், அன்றில் பறவை போலப் புலம்பிக்கொண்டு துன்புற்று வாழும் வாழ்க்கையை என்னால் தாங்கிக்கொள்ள இயலாது. அந்த நிலைமை எனக்கு வந்துவிட்டது. ஐயனே! கேள். பிரிந்து செல்லாதே. 
மணல்மேட்டில் நவ்விமான் குளம்பு பதிந்திருப்பது போல அதிரல் பூக்கள் கொட்டிக் கிடக்கும். அதன்மீது ஈங்கைப் பூ மொட்டுகள் கொட்டும். தை மாதத்தில் தெளிந்த நீரில் நீர்க்குமிழிகள் தோன்றும். அது வெள்ளியை உருக்கும் கலத்தில் வெள்ளிகொதிப்பது போலத் தோன்றும். அதிரல் பூமீது ஈங்கைப் பூ உதிர்வது, அந்த நீர்க்குமிழி போலவும், வெள்ளிநீர் கொதிப்பது போலவும் தோன்றும். இந்த நேரத்தில், ஐய, என்னை விட்டு நீங்காதே. அவள் அவனிடம் இவ்வாறு கூறுகிறாள்.