நற்றிணைப் பாடல் 118:
அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலியத்
தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில்
சேவலொடு கெழீஇய செங் கண் இருங் குயில்
புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும்
அகன்றோர் மன்ற நம் மறந்திசினோர் என
இணர் உறுபு உடைவதன் தலையும் புணர்வினை
ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய
துகிலிகை அன்ன துய்த் தலைப் பாதிரி
வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி
புது மலர் தெருவுதொறு நுவலும்
நொதுமலாட்டிக்கு நோம் என் நெஞ்சே
பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ
திணை: பாலை
பொருள்:
அயலகத்துப் பூக்காரி மேல் பாயும் தன் நெஞ்சைத் தலைவன் கடிந்துகொள்கிறான். ஆற்றங்கரையில் உள்ள மா மரத்து கிளையில் இளந்தளிர்களுக்கு இடையே இருந்துகொண்டு குயில்-சேவல் கூவும். அதனைக் கேட்டுப் பெண்குயில் விருப்பம் கொண்டு தானும் கூவும். இது பூக்கள் பூத்துக் குலுங்கும் காலம். கொத்திலிருக்கும் பூக்கள் வாடி உடைவது போல, விட்டுவிட்டுப் போனவர் மறந்துவிட்டாரோ என்று எண்ணி அவள் வாடிக்கொண்டிருப்பாள். ஓவியன் ஓவியம் தீட்டும் துகிலிகைக்கோலில் (டிசரளா) வண்ணம் தொடும் மயிர் அரக்கு வைத்துச் சேர்க்கப்பட்டிருப்பது போல வெண்மை நிறப் பாதிரிப் பூக்கள் மலர்ந்திருக்கும். வண்டு மொய்க்கும் பாதிரிப் புதுமலர்களைக் கூடையில் ஏந்திக்கொண்டு தெருத்தெருவாக விற்கும் அயலகத்தாளுக்காக என் மனம் நோகிறதே. என்ன கொடுமை. – இவ்வாறு தலைவன் தன் நெஞ்சைக் கடிந்துகொள்கிறான்.