• Fri. Apr 26th, 2024

இலக்கியம்

Byவிஷா

Feb 4, 2023

நற்றிணைப் பாடல் 108:

மலை அயற் கலித்த மை ஆர் ஏனல்
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை
அணையக் கண்ட அம் குடிக் குறவர்
கணையர் கிணையர் கை புனை கவணர்
விளியர் புறக்குடி ஆர்க்கும் நாட
பழகிய பகையும் பிரிவு இன்னாதே
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மடந்தை
சுடர் புரை திரு நுதல் பசப்ப
தொடர்பு யாங்கு விட்டனை நோகோ யானே

பாடியவர் பெயர் தெரியவில்லை
திணை: குறிஞ்சி

பொருள்:

 தோழி தலைவனுக்கு அறிவுரை கூறுகிறாள். 
மலையோரமாகத் தினை ’கருகரு’வெனத் தழைத்திருந்தது. தன் துணையைப் பிரிந்த யானை ஒன்று ஆசைக் கண்ணோடு அந்த விளைச்சலை அடைத்து நாசமாக்கிக்கொண்டிருந்தது. அங்கே குடியிருக்கும் குறவர்கள் அதனைக் கண்டனர். 

எய்து ஓட்ட வில்லம்பு, ஓசைப்பட்டுத்தி ஓட்டக் கிணை, கல் வீசி ஓட்டக் கையில் மாட்டிக்கொள்ளும் கவண் ஆகியவற்றுடன் வந்தனர். பக்கத்துக் குடியிருப்புக்களில் வாழ்வோரையும் கூவி அழைத்துக்கொண்டு வந்து ஆரவாரம் செய்தனர். இப்படி ஆரவாரம் செய்யும் நாட்டை உடையவனே! பழகியவர் பகையாளி ஆனாலும் அவரைப் பிரிதல் துன்பமே. அப்படி இருக்கும்போது உன்னைப் பார்த்து ஆசையோடு பல் இளிக்கும் இவளது சுடரும் முகநெற்றி பசப்பு ஊர்ந்து வாடும்படி விட்டுவிட்டாயே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *