

நற்றிணைப் பாடல் 11:
பெய்யாது வைகிய கோதை போல
மெய் சாயினை, அவர் செய் குறி பிழைப்ப்
உள்ளி நொதுமலர் நேர்பு உரை தௌளிதின்
வாரார் என்னும் புலவி உட்கொளல்
ஒழிகமாள நின் நெஞ்சத்தானே;
புணரி பொருத பூ மணல் அடைகரை,
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி,
வலவன் வள்பு ஆய்ந்து ஊர,
நிலவு விரிந்தன்றால் கானலானே.
பாடியவர் உலோச்சனார்
திணை நெய்தல்
பொருள்:
“இரவில் குறித்த நேரத்தில் தலைவன் வராததால் அணியாத மலர்மாலைபோல, உடல் மெலியும் தலைவியே! ‘அவர் வரமாட்டார்’ என ஊரார் உறுதியாய்க் கூறிய உரையை நினைத்து மனத்தில் அவர்மேல் வெறுப்புக் கொள்ளாதே. அலைமோதும் மணல் படர்ந்த கடற்கரையில் திரிகின்றன நண்டுகள்… அவை தன் தேருக்கடியில் நசுங்காமல் கடிவாளத்தைப் பிடித்து மெதுவாக ஓட்டி வருகிறான் தேர்ப்பாகன்…” அதைக் கண்டு நிலா விரிந்து ஒளிர்கிறது காண்பாயாக!
