

நற்றிணைப் பாடல் 10:
அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும்
பொன்னேர் மேனி மணியிற் றாழ்ந்த
நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்த லோம்புமதி பூக்கே ழூர!
இன்கடுங் கள்ளி னிழையணி நெடுந்தேர்க்
கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்
வெண்கோட் டியானைப் பேஎர் கிழவோன்
பழையன் வேல்வாய்த் தன்னநின்
பிழையா நன்மொழி தேறிய இவட்கே
பாடியவர்: பெயர் இடம் பெறவில்லை
திணை: பாலை
துறை: தோழி கூற்று
பொருள்:
தோழி தலைவனை நோக்கிச் சொல்கிறாள். ‘தலைவ! இனிய, கடுப்பு மிகுந்த கள்ளையும் அணிமணிகள் பூண்ட பெரிய தேர்களையும் உடைய சோழ மன்னர்கள் கொங்கரை வென்று அடக்குவதற்காக ஒரு மாவீரனைப் பணியமர்த்தினர். அவன் யானைகள் நிறைந்த பேஎர் எனும் ஊரின் தலைவனான பழையன் ஆவான். அவனது தனிச்சிறப்பு அவனிடமிருந்த குறிதப்பாத வேற்படை. அந்த வேல்போல என்றும் தவறாதது உன் வாக்குறுதி எனத் தலைவி நம்பி ஏற்றுக் கொண்டிருக்கிறாள். இப்போது நான் உன்னிடம் ஒப்படைக்கும் இத்தலைவியின் அண்ணாந்து உயர்ந்த மார்புகள் தளர்ந்தாலும், பொன்மேனியில் நீலமணிபோலப் படர்ந்து கிடக்கும் நீண்ட அழகிய கூந்தல் நரைத்தாலும் இவளைப் பிரியாமல் பாதுகாப்பாயாக !‘

