• Sat. Apr 20th, 2024

இலக்கியம்

Byவிஷா

Sep 28, 2022

நற்றிணைப் பாடல் 52:
மா கொடி அதிரல் பூவொடு பாதிரி
தூ தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்
சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி
வீங்கு உவர் கவவின் நீங்கல் செல்லேம்
நீயே ஆள்வினை சிறப்ப எண்ணி நாளும்
பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே
அன்பு இலை வாழி என் நெஞ்சே வெம் போர்
மழவர் பெருமகன் மா வள் ஓரி
கைவளம் இயைவது ஆயினும்
ஐது ஏகு அம்ம இயைந்து செய் பொருளே

பாடியவர்: பாலத்தனார்
திணை: பாலை

பொருள்:

கரிய கொடியையுடைய காட்டுமல்லிகையின் மலரோடு, பாதிரியின் தூய தகடு போன்ற மலரை எதிர்த்துக் கட்டிய சரத்தைச் சூடிய கூந்தலின் மணம் கமழும் நாற்றத்தை நுகர்ந்து, நாம் இவளின் அழகுத்தேமல் பரந்த மார்பினைச் சேர்த்துத் தழுவி, மிக்க இனிமையுடைய கைகளின் அந்த அணைப்பை விட்டு நீங்கிச் செல்லமாட்டோம்;. நீயோ, பொருளீட்டும் முயற்சியை மேம்பட்டதெனக் கருதி, ஒவ்வொருநாளும் பிரிந்து வாழும் வாழ்க்கையை விரும்பிச் சிறிதளவும் ஓயமாட்டாய்;

உனக்கு என்மீது அன்பு இல்லை, வாழ்க என் நெஞ்சே! கடுமையாகப் போரிடும் வீரர்களின் தலைவனான, மிகுந்த வள்ளண்மையுள்ள ஓரியின் கையிற்கிடைக்கும் பெருஞ்செல்வம் கிடைக்கப்பெறினும் அது மிகவும் எளிமையானதாகும், உன்னுடன் கூடிப்பெறும் அப் பொருள், நீயே ஏகுவாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *