• Sat. Apr 20th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Sep 27, 2022

நற்றிணைப் பாடல் 51:

யாங்குச் செய்வாம்கொல் தோழி! ஓங்கு கழைக்
காம்புடை விடர் அகம் சிலம்ப, பாம்பு உடன்று
ஓங்கு வரை மிளிர ஆட்டி, வீங்கு செலல்
கடுங் குரல் ஏறொடு கனை துளி தலைஇப்
பெயல் ஆனாதே, வானம்; பெயலொடு
மின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தென,
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே;
பெருந் தண் குளவி குழைத்த பா அடி,
இருஞ் சேறு ஆடிய நுதல, கொல்களிறு
பேதை ஆசினி ஒசித்த
வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே?
பாடியவர்: பேராலவாயர்
திணை: குறிஞ்சி

பொருள்:
மலையில் மூங்கில் எதிரொலிக்கும்படியும், பாம்பு துன்புறும்படியும் மின்னி இடித்துப் பெருமழை பொழிகிறது. மின்னலை நிமிர்த்தி வைத்தது போலச் சாமியாடி வேலன் வந்து நிற்கிறான். நன்றாகப் பின்னி முடித்த என் தலைமுடி அவிழ்க்கப்பட்டு ஆடுகிறது. (அவனுக்காக நான் வெறிபிடித்து ஆடுகிறேன்). கொல்லும் வலிமை படைத்த ஆண்யானை குளவிப்பூவைத் தன் பரந்த அடிகளால் மிதித்துக்கொண்டும், சேற்றை அள்ளி நெற்றியில் வீசிக்கொண்டும், ஒன்றுமறியாத பேதை ஆசினி மரத்தை ஒடிக்கிறது. அதன்மீது வேங்கைப் பூக்கள் கொட்டுகின்றன. இப்படிப்பட்ட மலைக்கு உரியவன் அந்தக் கிழவன். தோழி! என்ன செய்யலாம்? இப்படித் தோழியைக் கேட்கிறாள் தலைவி. வெளியில் காத்திருக்கும் தலைவனுக்குக் கேட்கும்படிக் கேட்கிறாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *