நற்றிணைப் பாடல் 20:
ஐய! குறுமகட் கண்டிகும்: வைகி,
மகிழ்நன் மார்பில் துஞ்சி, அவிழ் இணர்த்
தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல்
துளங்குஇயல் அசைவர, கலிங்கம் துயல்வர,
செறிதொடி தௌர்ப்ப வீசி, மறுகில்,
பூப் போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி,
சென்றனள்- வாழிய, மடந்தை!- நுண் பல்
சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள்;
மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர் குழை,
பழம் பிணி வைகிய தோள் இணைக்
குழைந்த கோதை, கொடி முயங்கலளே.
பாடியவர் ஓரம்போகியார்
திணை மருதம்
பொருள்:
ஐய, நீயா ஒன்றும் தெரியாதவர்? அவளா ஒன்றும் தெரியாத மடந்தை? அவளை நான் என் கண்ணால் பார்த்தேனே. அவளிடம் மகிழ்ச்சி கண்டவனின் மார்பிலே அவள் படுத்துக்கிடந்தாள். அதனால் அவன் மார்பில் அணிந்திருந்த மராம் பூ மாலையின் மணம் அவள் கூந்தலில் கமழ்ந்தது. அந்தக் கூந்தலை அவள் உலர்த்திக்கொண்டு வந்தாள். உடுத்தியிருந்த ஆடையையும் ஆட்டிக்கொண்டு வந்தாள். வளையல் ஓசை கேட்கும்படி கையை வீசிக்கொண்டு வந்தாள். தெருவில் நடந்துவந்தாள். கண்களை விரித்து அங்குமிங்கும் (உன்னைத்) தேடிக்கொண்டு வந்தாள். போனாள். வாழிய அந்த ஒன்றுமறியாத மடந்தை. (நீதானே அவளிடம் சென்றாய், அதனால் அவள் ஒன்றுமறியாத மடந்தை) அவள் உடம்பிலே சுணங்கு. நுண்ணிய பல சுணங்கு. சுணங்கு – அதுதான் நெளிவு சுழிவுகள். அந்த நெளிவு-சுழிவுகளைக் காட்டும் அணிகலன்கள். பூண்-அணிகள். உன் மார்பைத் தழுவிக் கிடந்த காதுக் குழைகள். பழைய தழுவல்-பிணிப்பு தெரியும் தோள். மார்போடு இணைந்து குழைந்துபோன பூமாலை. அவள் ஒரு கொடி. ஆமாம். அவள் உன்னைத் தழுவவே இல்லை?