நற்றிணைப் பாடல் 19:
இறவுப் புறத்து அன்ன பிணர் படு தடவு முதல்
சுறவுக் கோட்டன்ன முள் இலைத் தாழை,
பெருங் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு,
நல் மான் உழையின் வேறுபடத் தோன்றி,
விழவுக் களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப!
இன மணி நெடுந் தேர் பாகன் இயக்க,
செலீஇய சேறிஆயின், இவளே
வருவை ஆகிய சில் நாள்
வாழாள் ஆதல் நற்கு அறிந்தனை சென்மே!
பாடியவர் நக்கண்ணையார்
திணை நெய்தல்
பொருள்:
தாழம்பூ மணம் கமழும் உரம் கொண்ட நீர்நிலத் தலைவனே! மணிகள் பல ஒலிக்கும் தேரைப் பாகன் ஓட்டிச் செல்ல நீ செல்வாய். பின் மீள்வாய். நீ மீண்டும் வர சில நாள் ஆகும். அந்தச் சில நாள் கூட இவள் உன்னைப் பிரிந்து வாழமாட்டாள். இந்த உண்மையைத் தெரிந்துகொண்டு நீ செல்வாயாக. (எனவே திருமணம் செய்துகொண்டு உன்னுடன் அழைத்துச்செல்) – என்கிறாள்.
இறால் மீன் புறத்தே தோன்றுவது போல வேர் விட்டிருக்கும். சுறா மீன் கொம்பு போல இருக்கும் அதன் இலையில் முள்ளும் இருக்கும். யானையின் தந்தம் போல அது மொட்டு விடும். உழைமான் போலப் பூத்திருக்கும். ஊர்த் திருவிழா கொண்டாடிய இடம் மணம் கமழ்வது போல அது இருக்கும் இடமெல்லாம் மணம் வீசும் என்று தோழி கூறுகிறாள்.