நற்றிணைப் பாடல் 21:
விரைப் பரி வருந்திய வீங்கு செலல்இளையர்
அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ,
வேண்டு அமர் நடையர், மென்மெல வருக!
தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு
ஏமதி, வலவ, தேரே! உதுக் காண்-
உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன
அரிக் குரல் மிடற்ற அம் நுண் பல் பொறிக்
காமரு தகைய கானவாரணம்
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில்
புலரா ஈர் மணல் மலிரக் கெண்டி,
நாள் இரை கவர மாட்டி, தன்
பேடை நோக்கிய பெருந்தகு நிலையே!
பாடியவர் மருதன் இளநாகனார்
திணை முல்லை
பொருள்:
விரைந்து செல்லும் குதிரைகள் வருந்தும்படி போரில் விரைந்து சென்ற வீரர்கள் இளையர் தன் இடுப்பில் கட்டியிருக்கும் கச்சுகளை அவிழ்த்து வைத்துவிட்டு விருப்பம் போல் மெல்ல மெல்ல நடந்து வரட்டும். ஆ தேர்ப்பாகனே! நீ இதுவரையில் குதிரைகளை ஓட்டச் சாட்டைமுள்ளைப் பயன்படுத்தியது இல்லை. இப்போது அதனைப் பயன்படுத்திக் குதிரைகளை விரைந்து ஓட்டுக. விரைவில் இல்லாளை அடையவேண்டும். அங்குமிங்கும் பார். காட்டுக்கோழி ஈர மண்ணைக் கிண்டி இரையை வாயில் வைத்துக்கொண்டு தன் பெண்-கோழியைப் பார்க்கிறது.
உருக்கிய நெய்யில் பாலை விரலால் தொட்டுத் தெளித்து நெய் நன்றாகக் காய்ந்துவிட்டதா என்று பதம் பார்ப்பார்கள். அப்போது நெய்யில் சொடசொட என்று ஒலி கேட்குமே அதுபோல ஒலி எழுப்பும் கானவாரணம் (காட்டுக்கோழி). மழை பெய்து நின்ற பிறகு முல்லை-நிலத்தில் ஈரமண்ணைக் கிண்டியதாம் அந்தக் கோழி
இங்கே இரை இருக்கிறது என்று தன் பெண்கோழிக்குக் காட்டியதாம் அந்த ஆண்கோழி.