• Tue. Dec 10th, 2024

இலக்கியம்

Byவிஷா

Jun 6, 2023

நற்றிணைப் பாடல் 180:

பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை
கழனி நாரை உரைத்தலின் செந்நெல்
விரவு வெள்ளரிசியின் தாஅம் ஊரன்
பலர்ப் பெறல் நசைஇ நம் இல் வாரலனே
மாயோள் நலத்தை நம்பி விடல் ஒல்லாளே
அன்னியும் பெரியன் அவனினும் விழுமிய
இரு பெரு வேந்தர் பொரு களத்து ஒழித்த
புன்னை விழுமம் போல
என்னொடு கழியும் இவ் இருவரது இகலே

திணை : மருதம்

பொருள்:

 வயலில் படர்ந்திருந்த பாகல் கொடியில் முயிறு கூடு கட்டி முட்டையிட்டு வைத்திருக்கும். வயலில் மேயும்போது நாரையின் உடல் அதன் மேல் உரசினால் என்ன ஆகும். முயிற்றுக் கூட்டிலிருக்கும் முட்டைகள் கொட்டும். நெல்லரிசி கொட்டுவது போல முட்டைகள் கொட்டும். அப்படிக் கொட்டும் வயல்நிலத்தின் தலைவன் ஊரன்.  பல பெண்களைப் பெறலாம் என்னும் நப்பாசையோடு ஊரன் வீட்டுக்குத் திரும்பவில்லை. மனைவி மாயோளோ அழகு நலம் மிக்கவள். அவனை விருப்பம் போல் விட்டுவிட விரும்பவில்லை. வீட்டுக்கு இழுத்துவர நினைக்கிறாள். அரசன் அன்னி மிகவும் பெரியவன். அவனைக் காட்டிலும் சிறந்தவர்கள் இருபெரு வேந்தர்கள். போரில் அன்னியின் காவல்மரம் புன்னை சாய்ந்தது. அதுபோல நான், பரத்தையும் அவனும் என்று இரு திறத்தாருக்கு இடையே நடக்கும் போர் (இகல்) என்னோடு ஒழியட்டும். மற்றவர் யாரும் தலையிட வேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன். தோழி தலைவி சார்பில் இப்படித் தெரிவிக்கிறாள்.