உக்ரைனில் மருத்துவம் படித்த இறுதியாண்டு மாணவர்களுக்கு லைசென்ஸ் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
5வது மற்றும் இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கான KROK தேர்வு ரத்து என உக்ரைன் அரசு அறிவித்திருக்கிறது. தேர்வு ரத்து குறித்து இந்தியா திரும்பிய மாணவர்களுக்கு உக்ரைன் நாட்டு பல்கலைக்கழகங்கள் தகவல் அளித்துள்ளன. 3ம் ஆண்டு மாணவர்களுக்கான KROK-1 தேர்வை உக்ரைன் பல்கலைக்கழகங்கள் ஓராண்டு தள்ளி வைத்துள்ளன. 5ம் ஆண்டு மாணவர்களுக்கான KROK-2 தேர்வை ரத்து செய்தும் உக்ரைன் பல்கலைக்கழகங்கள் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இறுதியாண்டு KROK-2 தேர்வு எழுதாமலேயே மருத்துவ படிப்பிற்கான சான்றிதழ் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 27-வது நாளை எட்டியுள்ள நிலையில், மரியுபோல் நகரில் இருந்து உக்ரைன் ராணுவத்தினர் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ரஷ்யா கெடு விதித்துள்ளது. இந்த தாக்குதலில் கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கடும் சண்டைக்கிடையில் மனிதாபிமான வழித்தடத்தை பயன்படுத்தி 8,057 மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறினர்.
உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள வணிக வளாகம் மீது ரஷ்யா நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர். உக்ரைன்-ரஷ்யா படைகள் இடையே நேருக்கு நேர் துப்பாக்கி சண்டை நடைபெறும் நிலையில், கீவில் இன்று முதல் புதன்கிழமை காலை வரை புதிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து 22,500 இந்திய மாணவர்கள் அண்டை நாடுகளுக்கு வரவழைத்து விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். உக்ரைனில் போர் பதற்றம் அதிகரிப்பதால் உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்களின் கல்வி கேள்விக்குறியானது.
இதனிடையே உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் கல்வியை தொடர்வது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் ஒன்றிய அரசு நேற்று தெரிவித்தது. இந்நிலையில், உக்ரைனில் மருத்துவம் படித்த இறுதியாண்டு மாணவர்களுக்கு லைசென்ஸ் தேர்வு ரத்து செய்யப்படுவதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. உக்ரைன் அரசின் இந்த அறிவிப்பால் இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இனி தங்களது கல்விக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர்.