• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சட்ட மாமேதை அம்பேத்கர் நினைவுதினம்

Byவிஷா

Dec 6, 2021

தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடி, இந்திய வரலாற்றில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தக்கவைத்து கொண்ட ஒப்பற்ற தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம் இன்று.
அவரின் பல்துறை புலமை இன்றைக்கும் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.

பொருளாதாரம், சட்டம், வரலாறு, சமூகவியல், புவியியல் என எண்ணற்ற துறைகளில் தனக்கான தேடலை விடாமல் செய்தவர். அதுமட்டுமல்லாமல் இந்திய அரசியல் சட்டத்தை தனியொரு ஆளாக செதுக்கி இன்றளவும் அதற்கான பெருமையைத் தக்கவைத்தவர். அவர் எழுதிய எந்த கட்டுரையிலும் இந்த நாட்டின் மீது வெறுப்பை உமிழ்கிற வார்த்தைகளை நம்மால் காண இயலாது.
மாற்றத்தை கொண்டு வந்துவிட முடியும் என்கிற முனைப்பு அவரின் எழுத்திலும் சிந்தனையிலும் ஒளிர்விடுவதை காண இயலும். அம்பேத்கருக்கு ‘நவீன புத்தர்’ என்ற பட்டம் அவரது இளமை காலத்தில் புத்த மதத்தின் மிகமுக்கிய துறவியான மஹாந்த் வீர் சந்திரமணி என்பவரால் வழங்கப்பட்டது.


இந்தியாவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருதப்படும் அம்பேத்கர், 64 பாடங்களில் முதுகலை பட்டம் பயின்றவர். மேலும், இந்தி, பாலி, சமஸ்கிருதம், மராத்தி, குஜராத்தி, ஆங்கிலம், ஃபிரன்ஞ், ஜெர்மன், பெர்ஷியன் ஆகிய 9 மொழிகளில் புலமை பெற்றவராகவும் அம்பேத்கர் திகழ்ந்தார்.


ஒடுக்கப்பட்ட வர்கத்திலிருந்து பலரும் எட்ட முடியாத உயரங்களை அடைந்ததனாலேயே இவருக்கு இத்தனை சிறப்பு என்று சொல்லலாம். பள்ளிகளுக்குள்ளே அனுமதிக்கப்படாத ஒருவர் பிற்காலத்தில் நாட்டின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக கருதப்பட்டு, இந்திய சட்டத்தையே தனி ஒருவராக இயற்றினார் என்றால் அது சாதாரண காரியம் அல்ல. இவரது இன்றியமையா புகழுக்கு இதையே சான்றாக கூறலாம்.


சாதி, மதம், வறுமை போன்ற எதுவும் ஒருவரின் கல்வியையும் சிந்தனைகளையும் தடுத்துவிட முடியாது என்கிற நம்பிக்கையே அவரது வாழ்வும் சாதனைகளும் நம் இளைய தலைமுறைக்கு எடுத்துரைக்கும் மிகப்பெரிய போதனை என்றால் அது மிகையாகாது.

அவர் சிறுவயதில், தாழ்த்தப்பட்டவர் என்பதால் அனுபவித்த கொடுமைகளே அவரை செதுக்கியது. படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்ற பின்பும் கூட இந்த சாதிக்கொடுமை அழியவில்லை. அங்கும் பல இன்னல்களை சந்தித்த பின்னரே இவ்வளவு சாதனைகளை அவர் படைத்தார். இவரது வாழ்வே நமக்கு ஒரு பாடம்தான். அவரது சோசியலிச கருத்துகள் முன்மொழிவது ஒன்றுதான். அது சாதிகளை கடந்து மக்கள் ஒன்றுபட வேண்டும் என்பதும் தீண்டாமை என்னும் மடமையை கொளுத்த வேண்டும் என்பதும் தான்.


ஒப்பற்ற மாசற்ற இந்த இன்றியமையாத நாயகனை எடுத்துக்காட்டாக கொண்டு வாழ்வில் தடைகளை தகர்த்தெறிந்து சாதனைகள் படைப்போம்.!