• Fri. Mar 29th, 2024

வழுவூர் வீரட்டேஸ்வரர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேக திருப்பணி தொடக்கம்

அட்டவீரட்ட தலங்களில் ஒன்றான வழுவூர் வீரட்டேஸ்வரர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த சிறப்பு பூஜைகளுடன் திருப்பணி தொடக்கம்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வழுவூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் உள்ள இளங்கிளை நாயகி அம்பாள் சமேத வீரட்டேஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில், திருக்கடையூர், பரசலூர், கொற்கை உள்ளிட்ட அட்டவீரட்ட தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. 48 ஆயிரம் மகரிஷிகளுக்கு சுவாமி அஞ்ஞானத்தை போக்கி ஞானத்தை அளித்த தலமாகும்.

ஞானசபையில் சுவாமி வீரநடனம் புரிந்ததால் வீரட்டேஸ்வரர் என்ற பெயருடன் அருள்பாலிக்கும் சிவபெருமான், யானையை உரித்து சம்ஹாரம் செய்ததால் கஜசம்ஹார மூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். இத்தகைய சிறப்பு பெற்ற வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் கடந்த 2012ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்ய திட்டமிட்டு பாலாலயம் செய்யப்பட்டது.

திருப்பணிகள் தொடங்காமல் இருந்த நிலையில் இன்று தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் மாணிக்கவாசக தம்பிரான் முன்னிலையில் கோபூஜை, மூல மந்திரம், அஸ்திர ஜபம், ஹோமம் மற்றும் பூமி பூஜைகள் நடைபெற்று, திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டன. முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

பூஜைகளை குருமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையிலான 12 சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர். நிகழ்ச்சியில், பூம்புகார் தொகுதி எம்எல்ஏ நிவேதா முருகன், தனித்துணை ஆட்சியர் வேணு, அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், ஆடிட்டா் குரு சம்பத் ,இந்து அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *