டாப் கியரில் வேகமெடுக்கத் துவங்கியிருக்கிறது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு. சயான், கூட்டாளிகள் அனைவரும் தங்களுக்குத் தெரிந்த விஷயங்கள் அனைத்தையும் அப்படியே ஒப்புவித்து விட்டதால், சங்கிலி போல ஒவ்வொருவராக விசாரணை வளையத்துக்குள் சேர்க்கப்படுகின்றனர்.
கொடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜனிடமிருந்து போலீசார் ~கறந்துள்ள| பல தகவல்களும், இந்த சம்பவத்தில் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு உதவுவதாகச் சொல்கிறார்கள், வழக்கை விலாவாரியாக விசாரித்துக் கொண்டிருக்கும் முக்கியமான காவல்துறை அதிகாரிகள்.
முன்னாள் முதல்வர் பழனிசாமியால், ஜெயலலிதாவிடம் சேர்த்து விடப்பட்ட டிரைவர் கனகராஜூவும் இந்த சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாக இருந்து, விபத்தில் அல்லது மர்மமான முறையில் இறந்துள்ளார்.
அதுதான், இவ்வழக்கில் இப்போது முக்கியமான துருப்புச்சீட்டாக இருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமி, வேலுமணி மற்றும் தங்கமணி மூவருக்கும் நெருக்கமாக இருந்து, அவர்களின் துறைகளில் ஏராளமான ஒப்பந்தப்பணிகளை மேற்கொண்டு வந்த சந்தோஷ்குமார், கொலை, கொள்ளையை அரங்கேற்றிய கூலிப்படையின் தலைவனான சயானுக்கு 20 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளுக்கு ~பவர்| கொடுத்து, அதன்பின் அதை கேன்சல் செய்ததையும் போலீசார் கண்டு பிடித்து, அதற்கான ஆதார ஆவணங்களையும் எடுத்து விட்டனர்.
யார் சொல்லி, அந்த சொத்துகளை சயானுக்கு அவர் எழுதிக் கொடுத்தார் என்பதற்கான விசாரணை போய்க் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணை நடத்தி வரும் போலீஸ் டீம், மிகவும் அற்புதமாகப் பணியாற்றுவதாக போலீஸ் உயரதிகாரிகளே பாராட்டுப் பத்திரம் வாசிக்கின்றனர்.
முக்கியமாக ஐஜி சுதாகரின் ஈடுபாட்டையும், அணுகுமுறையையும், நுண்ணறிவையும் வியக்கின்றனர். வழக்கின் முக்கிய சாட்சிகளை அவரே நேரடியாக விசாரிக்கிறார்.
அழிக்கப்பட்ட ஆதாரங்களை மீட்டெடுப்பதற்கு, தொழில் நுட்பத்தின் மூலமாக தீவிரமான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
அவருக்குக் கீழே பணியாற்றும் எஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்களும் இதை ஒரு சேலஞ்ச் ஆக எடுத்துக் கொண்டுள்ளனர்.
கொடநாடு சம்பவத்தில் கொள்ளையடிக்கப்பட்டது சொத்து ஆவணங்கள் என்றும், அதில் பத்திரப் பதிவுத் துறையைச் சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருப்பதாகவும், சமீபமாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
அதிலும் குறிப்பிட்ட சில அதிகாரிகளைக் குறிவைத்து செய்திகள் பரப்பப்படுவதன் பின்னணி பற்றியும் தமிழக உளவுத் துறை விசாரித்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில், இந்தத் தகவலைப் பரப்பும் சிலரும், வேலுமணி டீம் ஆட்களும் மிகவும் நெருக்கமாக இருந்ததும், அதிமுக ஆட்சிக்காலத்தில் அவர்கள் பெரிதும் பலன் பெற்று வந்ததாகவும் உளவுத் துறை போலீசாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.
பதிவுத் துறைக்குள் நடக்கும் பதவிச் சண்டையில் சிலரைப் பழி வாங்குவதற்காக, அத்துறையின் இந்நாள், முன்னாள் அதிகாரிகள் பலரும் கைகோர்த்து, இத்தகைய தகவல்களைப் பரப்புவதாகவும் உளவுத் துறை கண்டறிந்திருக்கிறது.
இது, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கைத் திசை திருப்புவதற்காக நடக்கும் முயற்சி என்றும் உளவுத் துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது.
அதனால் ஏற்கெனவே விசாரணை சென்று கொண்டிருக்கிற திசையை விட்டுத் திரும்பாமல், இந்தத் தகவல்களையும் விசாரிப்பதற்கு சுதாகர் டீம் முடிவு செய்திருக்கிறது.
கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றுபவர்கள், கொலை, கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் என சம்பவத்தில் நேரடித் தொடர்புடையவர்களை மட்டுமே பட்டியலிட்டு, விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது இந்த டீம்.
அதில், கொடநாடு எஸ்டேட் எலெக்ட்ரிஷியன் முனுசாமி, கனகராஜ் மனைவி கலைவாணி, அண்ணன் தனபால், கனகராஜின் நண்பர்கள் சிலர் என பல சாட்சிகளிடம் நடத்திய விசாரணையில், சில முக்கியமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
அதிலும் முனுசாமி கொடுத்துள்ள தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக விசாரணை அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்தார்.
கொடநாடு எஸ்டேட்டில் எப்போதும் பவர்கட் ஆகாது. மிக மிக அபூர்வமாக பீஸ் போனாலும் உடனே போட்டு விடுவார்கள்.
கொடநாடு எஸ்டேட் வளாகத்துக்குள் பவர் கன்ட்ரோல் அறை என தனியாகவுள்ளது. அந்த அறை எப்போதுமே திறந்து தான் இருக்கும். அந்த அறையைப்பற்றி கனகராஜூக்கு நன்கு தெரியும்.
சம்பவம் நடந்த அன்று அந்த அறைக்குச் சென்று கனகராஜ் தான் மின்சாரத்தை அனைத்து இருப்பார் என்று முனுசாமி தன் வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாகத் தெரிகிறது.
இப்படிச் சாட்சிகள் கொடுத்த வாக்குமூலங்களும் இந்த டீமின் பணிகளை கொஞ்சம் வேகப்படுத்தியுள்ளன. கனகராஜின் அண்ணன் தனபாலின் வாக்கு மூலம், மிகவும் ~ஸ்ட்ராங்| ஆக இருந்திருக்கிறது.
கனகராஜ், ஜெயலலிதாவிடம் டிரைவராகப் பணியில் சேர்ந்தவுடன் சென்னையிலேயே செட்டில் ஆகியிருக்கிறார்.
அங்கேயே ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு, அங்கு தான் இருந்திருக்கிறார்.
ஜெயலலிதா இறந்தபின், ஊருக்கு வந்து விட்டாலும், எப்போதுமே பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்திருக்கிறார்.
ஆனால் அவர் எங்கே போகிறார், வந்தார் என்ற விவரம் யாருக்குமே தெரிய வில்லை. கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்துக்குப்பின் அவரைப் பார்த்த போது, மிகவும் பதற்றமாகக் காணப்பட்டிருக்கிறார்.
இதையெல்லாம் தன் வாக்குமூலத்தில் சொன்ன தனபால், தன் தம்பி விபத்தில் இறக்கவில்லை, கண்டிப்பாகக் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதை அடித்துச் சொல்லியிருக்கிறார். அந்தக் கொலையில் சிலருக்குத் தொடர்பிருக்கலாம் என்றும் சிலரை அவர் கைகாட்டியதாகச் சொல்கிறார்கள் காவல் துறை அதிகாரிகள். அப்படி அவர் கைகாட்டிய ஆட்களும் சேலத்துக்காரர்கள்தான்.
கனகராஜின் அண்ணன் சொன்ன தகவல்களை விட, கனகராஜின் மனைவி கலைவாணியிடம் மிகவும் நுணுக்கமாகப் பேசி, பல விஷயங்களை வாங்கியிருக்கிறது சுதாகர் டீம்.
ஜெயலலிதாவிடம் பணியாற்றும் போதும், அவர் இறந்த பின்னும் அவர் கலைவாணியிடம் பகிர்ந்த தகவல்கள், அலைபேசியில் அவர் பரிமாறிக் கொண்ட குறிப்புகள் என பலவற்றையும் போலீசார் எடுத்துள்ளனர்.
சென்னையிலிருந்து அவர் வெளியே போன நாட்கள், எங்கே தங்கியிருந்தார், எத்தனை முறை தொடர்பு கொண்டார் என துருவித்துருவி பல விஷயங்களை வாங்கியிருக்கிறார்கள்.
கொடநாடு சம்பவத்துக்குப் பின், இறப்பதற்கு முன்னால் இறுதியாக கனகராஜ் எடுத்துக் கொண்ட போட்டோக்கள், கலைவாணிக்கு அலைபேசியில் அனுப்பிய போட்டோக்கள், அவருடைய வீட்டிலிருந்த போட்டோ ஆல்பங்கள் அனைத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களை நம்மிடம் பகிர்ந்தார் ஒரு போலீஸ் அதிகாரி.
~~கனகராஜ் தொடர்பான பலரிடமும் நடத்திய விசாரணையில், ஓரளவுக்கு எல்லா விஷயங்களும் புலனாகி விட்டன.
அதற்கான ஆதாரங்களைத் திரட்டும் வேலை தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. கொடநாட்டில் ஏதோ ஆவணங்களை அவர்கள் கொள்ளையடித்திருக்கிறார்கள்.
அந்த ஆவணங்களை ஒரு பேக்கில் எடுத்துக் கொண்டு சேலத்துக்குச் சென்ற கனகராஜ், அதை அங்குள்ள ஒருவரிடம் கொடுத்து விட்டு, சென்னைக்கு வந்திருக்கிறார். மறுபடியும் நான்கு நாட்கள் கழித்து, அதாவது 2017 ஏப்ரல் 27ஆம் தேதியன்று எடப்பாடிக்குப் போயிருக்கிறார்.
அங்கு அவருடைய அம்மாவைப் பார்த்து விட்டு, அன்று இரவே ஆத்தூருக்கு அருகிலுள்ள சந்தனகிரிக்குப் போய், அவருடைய சித்தி வீட்டில் தங்கியிருக்கிறார்.
அன்று இரவு முழுவதும் தூங்காமல் யாருடனோ பேசிக்கொண்டே இருந்திருக்கிறார்.
அவர் பேசியது வாட்ஸ்அப் கால் என்று தெரிய வந்திருக்கிறது. மறுநாள் ஏப்ரல் 28ஆம் தேதி, சித்தி மகனுக்குச் சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு வெளியில் போயிருக்கிறார்.
நண்பர்கள் சிலரைப் பார்த்து விட்டு, சில முக்கியமான நண்பர்களுடன் அன்று இரவு அம்மாப்பாளையத்தில் உள்ள தாபாவுக்குப் போயிருக்கிறார். அங்கே எல்லோரும் சரக்கு அடித்து விட்டுச் சாப்பிட்டிருக்கிறார்கள்.
அங்கிருந்து அவர் சந்தனகிரிக்குத் திரும்பும் போது தான், பெரம்பலூர் சென்ற கார் மோதி சம்பவ இடத்திலேயே இறந்திருக்கிறார்.
கொடநாடு சம்பவத்துக்கு மறுநாள், கனகராஜ் சேலத்தில் யார், யாரைச் சந்தித்தார், ஏப்ரல் 26 அன்று சென்னையில் யார் யாரைச் சந்தித்தார், 27, 28 இரு தேதிகளில் சேலம் ஆத்தூர் பகுதியில் யார் யாரைச் சந்தித்தார் என்ற தகவல் அனைத்தையும் சேகரித்து விட்டது கொடநாடு விசாரணை டீம்.
கனகராஜ் மனைவி கலைவாணி, அண்ணன் தனபால் மற்றும் சேலத்தில் போலீசாரின் சந்தேகத்துக்கு உள்ளான சில நபர்களிடம் விசாரித்ததில், ஓர் அதிர்ச்சியான தகவல் கிடைத்திருக்கிறது.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிழலாக இருக்கக்கூடிய டிஎன்சிஎஸ்சி (கூட்டுறவு) இளங்கோவனுக்கும், கொடநாடு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது.
ஆனால், சம்பவம் நடந்த நாளில், இளங்கோவன் தமிழகத்திலேயே இல்லை என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிந்திருக்கிறது.
அதனால், அவர் திட்டமிட்டே, யாருக்கும் சந்தேகம் வராதபடி, வெளி மாநிலம் அல்லது வெளிநாடு போயிருக்கலாம் என்றும் யூகிக்கிறார்கள் அதிகாரிகள்.
அதனால் இளங்கோவனையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர முடிவு செய்திருக்கிறது விசாரணை டீம். கூடிய விரைவிலேயே அவருக்கு சம்மன் அனுப்பப்படுவதற்கு வாய்ப்பு அதிகமுள்ளது!|| என்றார் அந்த அதிகாரி.
எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படும் ~கூட்டுறவு| இளங்கோவனை விசாரிக்கத் துவங்கினால், அதிமுக தரப்பில் இன்னும் அதிர்வுகளும், ஆர்ப்பாட்டங்களும் அதிகமாகும் என்பது நிச்சயம்.
அதையும் எதிர் கொள்ளும் வகையில், முக்கியமான ஆதாரங்களைத் திரட்டுவதற்கே இப்போது வேலை நடந்து கொண்டிருப்பது தெரிகிறது.
பின்னால இருக்கு புரட்டாசி என்பார்கள்… அதிமுகவுக்கு இது ஸ்பெஷல் புரட்டாசி தான் போலிருக்கிறது!