பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்து கன்னடத்தில் வெளியான படம் ‘கே.ஜி.எப்’. தொடர்ச்சியாக இதன் இரண்டாம் பாகம் அதே கூட்டணியில் உருவாகி உள்ளது. இவர்களுடன் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் இணைந்துள்ள இப்படம், ஏப்., 14ல் வெளியாக உள்ளது. இந்நிலையில் கேஜிஎப் 2 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடந்தது.
இதில் யஷ், சஞ்சய் தத், ரவீனா உள்ளிட்ட படக்குழுவினர் உடன் பிருத்விராஜ், கரண் ஜோகர் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் பங்கேற்றனர். டிரைலரை கன்னட நடிகர் சிவராஜ் குமார் வெளியிட்டார். கேஜிஎப் படத்தின் முதல்பாகம் வில்லன் கருடன் இறந்ததும், அந்த இடத்திற்கு யஷ் செல்வது போன்று முடிந்தது. இரண்டாம் பாகம் கருடன் இறந்த பிறகு என்ன நடந்தது என்பதை விவரிக்கும் விதமாக ஆரம்பமாகிறது.
நடிகர் பிரகாஷ் ராஜ் என்ன நடந்தது என்பதை விவரிப்பது போன்று டிரைலர் செல்கிறது. பிறகு கேஜிஎப்பை கைப்பற்ற அரசு ஒரு பக்கம், சஞ்சய் தத் ஒரு பக்கம் என யஷ் உடன் மோதுவதை டிரைலர் உணர்த்துகிறது. ரசிகர்களிடம் இந்த டிரைலர் அமோக வரவேற்பை பெற்றுள்ளதற்கு, வெளியான சற்றுநேரத்திலேயே பல லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது சான்றாக அமைந்துள்ளது!