

தமிழ்நாடு முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
கடந்த 2024 ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, ஜெனரிக் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதல்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அவர் அறிவித்தது போல, தமிழ்நாடு முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இவ்விழாவில் கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாண்டி பஜாரில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தக கடையையும் பார்வையிடுகிறார். மேலும் பொதுமக்களிடம் மருந்தகம் தொடர்பாக உரை நிகழ்த்த உள்ளார். முதல்வர் மருந்தகங்களில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 25 சதவீத தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்பட உள்ளன.
இன்று திறக்கப்பட உள்ள 1,000 முதல்வர் மருந்தகங்களில் சென்னையில் 33 இடங்களிலும், மதுரையில் 52, கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40 என திறக்கப்பட தயாராக உள்ளன. இந்த மருந்தகத்திற்கு தேவையான மருந்துகள் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. அதேபோல முதல்வர் மருந்தகம் திறக்கும் தொழில் முனைவோருக்கு 3 லட்சம் ரூபாய் வரை தமிழ்நாடு அரசு மானியமாக வழங்குகிறது. இதில் 50 சதவீத தொகையானது ரொக்கமாகவும், மீதம் அனைத்தும் மருந்துகள் வடிவத்திலும் வழங்கப்படுகிறது.

