• Mon. Mar 17th, 2025

சமூக ஆர்வலர் லாரி ஏற்றிக்கொலை – 3 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!

ByP.Kavitha Kumar

Feb 24, 2025

புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜகபர் அலி லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பேரில் மூவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூரைச் சோ்ந்தவர் ஜகபா் அலி (58). சமூக ஆர்வலரான ஜகபர் அலி, அதிமுக முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினராக இருந்துள்ளார். இவர் புதுக்கோட்டை பகுதியில் நடைபெற்ற கனிம வளக் கொள்ளை குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்துளளார்.

இந்த நிலையில், கடந்த ஜன.17-ம் தேதி பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டுஜகபர் அலி, தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி மோதியதில் ஜகபர் அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கனிம வளக்கொள்ளையை தட்டிக் கேட்டதால் ஜகபர் அலி கொலை செய்யப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

இந்தச் சம்பவம் குறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.அப்போது கனிமவளக் கொள்ளையில் சம்பந்தப்பட்ட சிலர் ஜகபர் அலியை திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, விபத்து வழக்கை, கொலை வழக்காக மாற்றிய திருமயம் போலீசார் கல்குவாரி உரிமையாளர் உட்பட 5 பேரை கைது செய்து புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் கைதானவர்கள் தரப்பில் இரண்டு முறை நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த வழக்கில் சிறையில் உள்ள ஐந்து பேரில் மூன்று பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சிபிசிஐடி போலீசார் ஆட்சியர் அருணாவிற்கு பரிந்துரை செய்தனர்.

இதன் அடிப்படையில் குவாரி உரிமையாளர்கள் ராசு, ராமையா மற்றும் லாரி உரிமையாளர் முருகானந்தம் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் அருணா உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் மூன்று பேர் மீதும் குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் புதுக்கோட்டை மாவட்ட சிறையில் இருந்த நிலையில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.