• Tue. Mar 25th, 2025

காளை வயிற்றில் ‘கீ’
அசத்திய டாக்டர்கள்

தேனியில் ஜல்லிக்கட்டு காளை வயிற்றிலிருந்து 35 கிலோ பாலிதீன் கழிவுகள், இரும்பு கம்பிகள், சாவி உட்பட பொருட்களை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர் குழுவினர் வெற்றிகரமாக அகற்றினர்.

தேனியை சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவர் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறார். எப்போதும் சுறுசுறுப்புடன் காணப்பட்ட, இக்காளை நாளடைவில் சோர்வடைய துவங்கியது. மேலும் உணவு உட்கொள்வதில் அடம் பிடித்ததால், மெல்ல மெல்ல உடல் மெலிய துவங்கியது. ஆனால், வயிறு மட்டும் வற்றாமல் புடைப்புடன் காணப்பட்டது. இப்படியே போனால் காளைக்கு சிக்கல் ஏற்படும் என கருதி, பெரியகுளத்தில் உள்ள தேனி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவ மனைக்கு காளையை அழைத்து சென்றார், சிரஞ்சீவி. அங்கு காளையை பரிசோதித்த டாக்டர்கள் அதன் வயிற்றில் தான் பிரச்னை உள்ளது, என தெள்ளத் தெளிவாக கண்டறிந்தனர். துறை தலைவர் உமாராணி தலைமையில் டாக்டர்கள் அருண், சரண்யா, விஷ்ணு மற்றும் மருத்துவ உதவியாளர்கள் கொண்ட குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் காளையின் வயிற்றில் இருந்து 35 கிலோ பாலிதீன் கழிவுகள், இரும்பு கம்பிகள், சாவி உள்ளிட்ட பொருட்களை அகற்றினர். அறுவை சிகிச்சைக்கு பின் காளையின் ‘கம்பீர’ நடையை பார்த்து சிரஞ்சீவி மட்டுமல்ல டாக்டர்கள் குழுவினர் முகத்திலும் மகிழ்ச்சி தென்பட்டது. காளையை காப்பாற்றிய டாக்டர் குழுவினர்களுக்கு ‘இருகரம் கூப்பி’ நன்றி தெரிவித்த கையோடு காளையுடன், சிரஞ்சீவியும் நெஞ்சை நிமிர்த்தி அங்கிருந்து நடையை கட்டினார்.