• Fri. Mar 29th, 2024

கோவையைத் தொடர்ந்து கரூர் மாணவி தற்கொலை – மனதை பதறவைக்கும் மாணவியின் கடிதம்

Byமதி

Nov 20, 2021

பாலியல் தொல்லையால் கோவை மாணவி தற்கொலை செய்து கொண்டது போல், கரூர் பிளஸ்2 மாணவியும் பாலியல் தொல்லையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

கரூர் பஞ்சமாதேவியை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவி அங்குள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தார். தந்தை இறந்துவிட்டதால், தாயுடன் வசித்து வந்தார். பள்ளியில் தற்போது நேரடி வகுப்பு நடந்து வருகிறது. நேற்று வழக்கம்போல் மாணவி பள்ளிக்கு சென்றார். தாய் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலைக்கு சென்று விட்டார். மாலை 5 மணியளவில் வீட்டுக்கு வந்த மாணவி தனியாக இருந்துள்ளார். கார்த்திகை தீபத்தையொட்டி வாசலில் தீபம் வைக்காததால் பக்கத்து வீட்டு பாட்டி வந்து மாணவியை அழைத்துள்ளார். ஆனால் மாணவி வெளியே வராததால் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, மாணவி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

தகவலறிந்த வெங்கமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் வந்து மாணவியை தூக்கில் இருந்து இறக்கி பரிசோதித்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

மாணவியின் வீட்டில் போலீசார் சோதனையிட்டபோது டேபிளில் மாணவி எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் சிக்கியது. அதில், “பாலியல் துன்புறுத்தலால் சாகும் கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கனும். என்னை யார் இந்த முடிவு எடுக்க வெச்சான்னு நான் சொல்ல பயமா இருக்கு. இந்த பூமியில் வாழ்வதற்கு ஆசைப்பட்டேன். ஆனா இப்போது பாதியிலேயே போறேன். இன்னொரு தடவ இந்த உலகத்துல வாழ கிடைச்சா நல்லா இருக்கும். பெரிதாகி நிறைய பேருக்கு உதவி பண்ண ஆசை. ஆனா முடியவில்லை. ஐ லவ் அம்மா, சித்தப்பா, மாமா, அம்மு. உங்க எல்லோரையும் ரொம்ப பிடிக்கும். ஆனா நான் உங்ககிட்ட எல்லாம் சொல்லாம போகிறேன். மன்னிச்சுருங்க. இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக்கூடாது, சாரி மச்சான் சாரி” என எழுதி கையெழுத்திட்டுள்ளார்.

இந்த கடிதத்தை ஆதாரமாக கொண்டு வெங்கமேடு போலீசார் வழக்கு பதிந்து மாணவி தற்கொலைக்கு பாலியல் தொல்லை தான் காரணமாக இருந்தால், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது யார் என உடன் படிக்கும் மாணவிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *