பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள கனரா வங்கியின் விஜயபுரா, மனகுல்லி கிளையில் பெரும் கொள்ளை நடந்துள்ளது. வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 59 கிலோ தங்கம் மற்றும் ₹5 லட்சத்திற்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ₹53 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மே 23 அன்று மாலை 7 மணி முதல் மே 25 அன்று காலை 11:30 மணிக்குள் இந்தக் கொள்ளை நடந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மே 23 அன்றுதான் வங்கியின் கடைசி வேலை நாளாகும்.
மே 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வங்கி விடுமுறையாக இருந்தது. மே 25 அன்று காலை 11:30 மணியளவில், வங்கியின் ஊழியர் ஒருவர், பிரதான ஷட்டரின் பூட்டுகளும் கிரில்களும் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தார். நண்பகலில் பிராந்திய அலுவலக அதிகாரிகள் உட்பட வங்கிக்கு வந்து ஆய்வு செய்த பின்னரே கொள்ளை உறுதி செய்யப்பட்டது.
கொள்ளையில் சுமார் எட்டு பேர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக விஜயபுரா போலீஸ் சூப்பிரண்டு லட்சுமண் நிம்பார்கி தெரிவித்தார். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு இப்பொழுது தான் தெரியவந்தது. குற்றவாளிகளைப் பிடிக்க எட்டு புலனாய்வுக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதற்கிடையில், சம்பவ இடத்தில் சில விசித்திரமான பொருட்கள், அதாவது மாந்திரீகத்திற்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இது விசாரணையை திசைதிருப்பும் முயற்சி என்று போலீஸ் கருதுகிறது.