தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களில் ஒரு இடத்திற்கு அடுத்த மாதம் 13-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், போட்டியிடுபவர் பெயரை தி.மு.க. அறிவித்துள்ளது.
டெல்லி மேல்சபை எம்.பி.யாக இருந்த அ.தி.மு.க.வை சேர்ந்த ராணிப்பேட்டை முகமது ஜான் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது பதவிக்காலம் 2025 ஜூலை 24 வரை இருந்ததால் அந்த இடத்துக்கு தமிழகத்தில் இருந்து வேறு ஒருவரை தேர்ந்தெடுக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
அதன்படி செப்டம்பர் 13-ந் தேதி தேர்தல் நடத்த அட்டவணை வெளியிடப்பட்டது. இந்த ஒரு இடத்திற்கு போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 24-ந் தேதி முதல் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
போட்டி இருக்கும் பட்சத்தில் செப்டம்பர் 13-ந் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது. தமிழக சட்டசபையில் 234 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில் 118 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு யாருக்கு கிடைக்கிறதோ அவர்கள்தான் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியும். அந்த வகையில் தி.மு.க.வுக்கு மட்டும் மெஜாரிட்டியாக 125 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால் தி.மு.க. நிறுத்தும் வேட்பாளரே வெற்றி பெறுவார் என்ற நிலை உள்ளது.
இந்தநிலையில் டெல்லி மேல்சபை எம்.பி. பதவிக்கு இன்று தி.மு.க. சார்பில் எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தி.மு.க. தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2021 செப்டம்பர் 13-ந் தேதியன்று நடைபெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என அறிவிக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
எம்.பி. பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எம்.எம்.அப்துல்லா முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். எம்.எம். அப்துல்லா சிறுபான்மை பிரிவில் மாநில துணை செயலாளராக முதலில் பணியாற்றினார். அதன் பிறகு தகவல் தொழில் நுட்ப பிரிவில் மாநில துணை செயலாளராக இருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி இணை செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. தற்போது அவரது பெயர் எம்.பி. பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் கட்சி நிர்வாகிகள் பலர் எம்.எம்.அப்துல்லாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி மேல்சபையில் அ.தி.மு.க. எம்.பி.க்களாக இருந்த கே.பி.முனுசாமி, ஆர்.வைத்தியலிங்கம் ஆகிய 2 பேரும் எம்.எல்.ஏ.க்கள் ஆனதால் தங்களின் எம்.பி. பதவியை ராஜினாமா செய்திருந்தனர். ஆனாலும் இந்த 2 எம்.பி. பதவிகளுக்கான இடங்களுக்கு இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது.