• Fri. Apr 19th, 2024

களை கட்டியது கடையநல்லூர் உள்ளாட்சி தேர்தல்!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் களை கட்டியுள்ளது. திமுக, அதிமுக தவிர காங், அ.ம.மு .க, பா.ஜனதா, கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சிறுத்தை, புதிய தமிழகம், நாம் தமிழர், எஸ்.டி.பி.ஐ. போன்ற அரசியல் கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் களமிறங்குவதால் தற்போது தேர்தல் களை கட்ட துவங்கியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலே மக்கள் தொகையாலும் பரப்பளவாலும் மிகப் பெரிய நகராட்சி கடையநல்லூர் நகராட்சி! 33 வார்டுகள் கொண்ட நகராட்சியில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் கொண்டது. இங்கு 82 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. கடையநல்லூர் நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்பட்டு வருகிறார். இது தவிர 4 உதவி தேர்தல் அலுவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 1 முதல் 8 வது வார்டு வரை வேளாண்மை அலுவலர் சரவணன், 9 முதல் 16வது வார்டு வரை,நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், 17 முதல் 24 வது வார்டு வரை. வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளர் சந்திரசேகர், 25 முதல் 33 வது வார்டு வரை சுகாதார ஆய்வாளர் சக்திவேல் உதவி தேர்தல் அலுவலர்களாக செயல்படுகின்றனர்.

கடையநல்லூர் காவல் ஆய்வாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் கனகராஜன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட காவலர்கள் தினசரி நகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் பணியாற்றி வருகின்றனர். சுகாதார அலுவலர் இளங்கோ ஆலோசனையின் பேரில் சுகாதார ஆய்வாளர் சிவா தலைமையில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், நகராட்சி அலுவலகத்திற்கு வரும் வேட்பாளர்கள், வேட்பாளரின் முகவர்கள் பொதுமக்களுக்கு சானிடைசர் வழங்கி வெப்ப பரிசோதனை செய்தும் பார்வையாளர்கள் குறித்த தகவல்களை சேமித்து வருகின்றனர்.

இதில் ஆளும் கட்சியினர் வார்டுகளில் போட்டியிட வாய்ப்பு கிட்டாதவர்களும் கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்பட்டவர்களும் சுயேட்சையாக போட்டியிடுவதால் ஆளும் கட்சியினர் அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக கூட்டுறவு சங்க தேர்தல் அறங்காவலர் குழு பதவிகளை தருவதாக பேசி வருகின்றனர். அஇஅதிமுக சார்பில் 33 வார்டுகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் கத்தில் முன்னிலையில் உள்ளது. முழுமையான வேட்பு மனு பரிசீலனை முடிந்த பின் கடையநல்லூர் நகராட்சியை கைப்பற்ற போவது யார் என தெரிய வரும் ஆளும் கட்சியான திமுகவில் நகர செயலர் சேகனா மூப்பன் ஹபீப், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ராசையா, தொழிலதிபர் சுந்தரமகாலிங்கம் என ஒரு படையே நகர்மன்ற தலைவர் வேட்பாளராகவும் அஇஅதிமுகவில் 2து வார்டில் போட்டியிடும் பூங்கோதை கருப்பையாவும் பாஜக சார்பில் 1வது வார்டில் போட்டியிடும் ரேவதி பாலீஸ்வரனும் தற்போது களத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *