சத்யராஜ் நடித்திருக்கும் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தினை வெளியிடுவதற்கு கேரளா மாநிலத்தில் உள்ள ஆழப்புழா நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹனி பீ பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சஜீவ் மீரா சாஹிப் ராவுத்தர் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.இந்தப் படத்தில் சத்யராஜ், ஸ்மிருதி வெங்கட், மதுசூதன் ராவ், ஹரீஷ் உத்தமன் மற்றும் ரேணுகா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.பிரசாத் எஸ்.என். இசையமைக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநரான தீரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.
தணிக்கை சான்றிதழ் பெற்றுவிட்ட நிலையில், (2021டிசம்பர் 25)நாளை படம் தியேட்டர்களில் வெளியாவதாக அறிவிப்பட்டு வேலைகள் நடைபெற்று வந்த சூழலில் இந்தப் படத்தை வெளியிட ஆழப்புழா நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
இது குறித்து இந்தப் படத்துடன் சம்பந்தப்பட்ட இன்பினிட்டி பிரேம்ஸ் புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான கே.கே.சுதாகரன் பத்திரிகையாளர்களை சந்தித்து கூறியதாவது “இந்தப் படம் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவக்கப்பட்டது.
துவங்கப்பட்டபோது இந்தப் படத்தை தயாரிப்பாளர் சஜீப்பின் ஹனி பீ புரொடெக்சன்ஸ் நிறுவனமும், என்னுடைய இன்பினிட்டி பிரேம்ஸ் புரொடெக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாக ஒப்பந்தம் செய்திருந்தோம். இந்தப் படத்தில் நான் இணை தயாரிப்பாளராகக் குறிப்பிடப்பட்டிருந்தேன்.
படத்தின் துவக்கத்தில் மிக அதிகமாக என்னுடைய இன்பினிட்டி நிறுவனமே பணத்தை முதலீடு செய்து படத்தை தயாரித்து முடித்துள்ளது. இந்த நிலையில் என்னிடம் சொல்லாமலேயே படத்தின் விளம்பரங்களில் என்னுடைய பெயரையும், என் நிறுவனத்தின் பெயரையும் நீக்கிவிட்டு தன்னுடைய பெயரையும், தன் நிறுவனத்தின் பெயரையும் மட்டுமே தயாரிப்பாளர் சஜீப் கொடுத்துள்ளார்.
இது குறித்து நாங்கள் அவருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து அவர் மீது கேரள மாநிலம் ஆழப்புழாவில் உள்ள துணை நீதிமன்றத்தில் சிவில் வழக்கும், மோசடி செய்ததற்கான கிரிமினல் வழக்கையும் பதிவு செய்துள்ளோம். இந்த வழக்குகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்தத் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்திற்கு சென்சார் சான்றிதழைப் பெற்றுவிட்டு அல் டாரீஸ் என்ற பட நிறுவனத்திடம் படத்தின் வெளியீட்டு உரிமையையும் தயாரிப்பாளர் சஜீப் விற்பனை செய்துவிட்டார்.மேலும் இந்தப் படம் டிசம்பர் 24 அன்று வெளியாவதாக வெளி வந்த செய்தியை குறிப்பிட்டு நீதிமன்றத்தில் நாங்கள் முறையிட்டோம். இதனல், ஆழப்புழா நீதிமன்றம் இந்த ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தினை தியேட்டர்கள், ஓடிடியில் மட்டுமின்றி எந்த வகையிலும் வெளியிடக் கூடாது என்று தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது..” என்றார்.