புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 4.74 கோடியில் அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சை பிரிவை மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் திறந்து வைத்தார்.
புதுச்சேரி ஜிப்மரில் ரூ.4.74 கோடியில் அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சை பிரிவு புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழா இன்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் முன்னிலை வகிக்க முதலமைச்சர் ரங்கசாமி தலைமை வகித்தார். புதுப்பிக்கப்பட்ட அவசர, விபத்து சிகிச்சை பிரிவை மத்திய மந்திரி பிரதாப்ராவ் ஜாதவ் திறந்து வைத்தார்.

விழாவில் சபாநாயகர் செல்வம், செல்வகணபதி எம்பி, அரசு கொறடா ஆறுமுகம்,உட்பட பலர் கலந்துகொண்டனர்.
புதுப்பிக்கப்பட்ட சிகிச்சை பிரிவு மேம்படுத்தப்பட்ட தீயணைப்பு பாதுகாப்பு அம்சங்களுடன் மத்திய பொதுப்பணித்துறையால் கட்டப்பட்டுள்ளது. இந்த பிரிவு நாள் ஒன்றுக்கு 350 முதல் 450 அவசர சிகிச்சை நோயாளிகளை கையாளும் திறன் கொண்டது.
நோயாளிகள் பராமரிப்பு, செயல்திறன், அவசரகால தயார்நிலை ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டு இந்த பிரிவு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் யாதவ் ஜிப்மரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்..

தென்னகத்தில் எய்ம்ஸ்க்கு இணையானது ஜிப்மர். அதன் வளர்ச்சிக்கு தேவையான நிதியை ஒதுக்குகிறோம். பல வளர்ச்சித்திட்டங்கள் நடக்கிறது. இக்கல்லூரியில் இருந்து 18 ஆயிரம் மாணவர்கள் வந்துள்ளனர்.1800 படுக்கைகள் வசதி உள்ளது.அவசர சிகிச்சை பிரிவு மேம்படுத்தப்பட்டுள்ளது. பல பிரிவுகளில் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.புதிய கட்டுமானங்கள் தொடர்பாக ஆய்வு செய்யவுள்ளோம். அதை உரிய காலத்துக்குள் செயல்படுத்தவும் அறிவுறுத்துவோம்.எம்பிபிஎஸ் ஆயுர்வேதா இன்டர்கிரேட் படிப்புகளை தொடங்க ஆலோசித்து வருகிறோம்
நடப்பு ஆண்டு ரூ 1450 கோடி ஜிப்மருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல மேம்பாட்டு திட்டப்பணிகள் நடக்கிறது.
காரைக்காலில் ஜிப்மர் மருத்துவமனை வரும் 2027 ஜூனுக்குள் இயங்க தொடங்கும். இங்கு 470 படுக்கை வசதிகள் அமையும் அனைத்து நிதியும் மத்திய அரசு ஒதுக்கீட்டில் நடக்கிறது.காரைக்காலில் அரசு மருத்துவக்கல்லூரி அமைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.