• Wed. Aug 19th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

“ஜே.சி.பி வாடகை உயர்வு மற்றும் வேலைநிறுத்தம்” உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பாக, ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆகிய மூன்று நாட்களுக்கு சின்னமனூர் பகுதியில் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. டீசல் விலை, வாகன இன்சூரன்ஸ், சாலை வரி மற்றும் உதிரிபாகங்களின் கடும் விலை உயர்வு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்பு 21 லட்சம் ரூபாயாக இருந்த ஒரு புதிய ஜேசிபி வாகனத்தின் விலை, தற்போதைய சந்தை நிலவரப்படி பயன்பாட்டிற்கு வரும்போது சுமார் 45 லட்சம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மேலும், வாகன பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் ஆயில் சர்வீஸ் கட்டணம் மற்றும் பராமரிப்பு செலவுகளுக்கே உரிமையாளர்களின் வருமானத்தில் 70 சதவீதம் வரை செலவாகிவிடுகிறது. மீதமுள்ள 30 சதவீத வருமானத்தை வைத்துக்கொண்டு வங்கிக் கடன் தவணைகளை (EMI) செலுத்த முடியாமல் பல உரிமையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இத்தகைய நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கடன் நிலுவைகளுடன் தொடர்ந்து மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு, வரும் 20.08.2026 முதல் உத்தமபாளையம் தாலுகா முழுவதிலும் ஜேசிபி வாகனங்களுக்கான புதிய வாடகை விகிதம் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி 1 மணி நேரத்திற்கு ரூ. 1,500, டிரைவர் படி ரூ. 800 மற்றும் குறைந்தபட்ச கட்டணமாக 2 மணி நேரத்திற்கு ரூ. 4,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வாடகை உயர்வில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த முடிவை எடுத்துள்ளனர். எந்தவொரு உரிமையாளரும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ வாங்காமல், அனைவருமே ஒரே சீரான கட்டணத்தில் வாகனங்களை இயக்க வேண்டும் என்பது சங்கத்தின் முக்கிய தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு பொதுமக்களை பெரிதும் பாதிக்காத வகையில் நியாயமான முறையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், இக்கட்டான சூழலில் இருக்கும் உரிமையாளர்களின் நிலைமையை உணர்ந்து பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.