• Fri. Mar 29th, 2024

‘ஜம்தாரா கொள்ளையர்கள்’ 3 பேர் கைது.., அதிரடி காட்டிய சைபர் கிரைம் போலீஸ்..!

Byவிஷா

Oct 30, 2021

கோடம்பாக்கத்தைச் சேர்ந்த முதியவர் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம், செல்போன் சேவை துண்டிக்கப்பட உள்ளதாகக் கூறி ஓடிபி பெற்று ரூ. 13 லட்சம் பணத்தை மோசடி செய்துவிட்டதாக புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் கொல்கத்தாவிற்குச் சென்று ஜம்தாரா சைபர் கிரைம் மோசடி கும்பலை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். இவர்கள், ஜார்கண்ட் ஜம்தாரா மாவட்டத்தைச் சேர்ந்த பிஷ்வ நாத் மண்டல், பாபி மண்டல், ராம்புரோஷாத் ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 11 லட்சத்து 20 ஆயிரம் பணம், 148 கிராம் தங்கம், 1 ஹோண்டா சிட்டி கார், 19 ஏடிஎம் கார்டுகள், 160 சிம் கார்டுகள், 20 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.


இந்நிலையில், கைது செய்யப்பட்ட 3 பேரையும் சென்னைக்கு அழைத்து வந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
டெல்லியில் சொந்தமாக சொகுசு வீடு வாங்கி வசதியாக வாழவேண்டும் என்ற நோக்கத்தோடு சைபர் மோசடி குறித்தான பயிற்சியை ஒருவரிடம் மேற்கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தென் மாநிலங்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வந்த 3 பேரும் 95000 என்ற பொதுவான 5 எண்ணுடன் 5 வௌ;வேறு எண்களை இணைத்து குறுந்தகவல் அனுப்பி வந்துள்ளனர்.


இப்படி ஒரு நாளைக்கு 500-க்கும் மேற்பட்டோருக்கு குறுந்தகவல் அனுப்பி பண மோசடியில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அதில் சிக்குவோரிடம் செயலியை பதிவேற்றம் செய்யக்கூறி ஓடிபியை திருடி பணத்தை மோசடி செய்வதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். போலி ஆவணங்கள் மூலம் சிம்கார்டுகளை வாங்கும் இவர்கள், ஒரே இடத்தில் நிரந்தரமாக இருந்தால் போலீசாரிடம் சிக்கிக்கொள்வோம் என்பதை அறிந்து பல மாநிலங்களுக்குச் சென்று பதுங்கி விடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.


மோசடி செய்த பணத்தை 19 வங்கி கணக்கிற்கு மாற்றி பணத்தை எடுப்பதால், போலீசார் தங்களை நெருங்க முடியாது என வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். கொள்ளையடித்த பணத்தில் மூவரும் சொகுசு வீடு, சொகுசு கார், விலையுயர்ந்த ஆபரணங்கள், காலணி என ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டுள்ளனர். இவர்கள் புதிதாக புக் செய்துள்ள சொகுசு கார் ஒன்றையும் சைபர் கிரைம் போலீசார் முடக்கி உள்ளனர். மேலும் இந்தக் கும்பல் உபயோகப்படுத்திய சிம்கார்டுகளின் எண்களை வைத்து யாருடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்ற விவரங்களை சேகரித்து வருவதாகவும், இதேபோல் எத்தனை நபர்களிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *