பொங்கல் பண்டிகையையொட்டி உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கி
கோலாகலமாக நடைபெற்று வருகிறது.போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அமைச்சர்கள் மூர்த்தி பழனிவேல் தியாகராஜன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த ஜல்லிக்கட்டில் முன்னதாக மாடுபிடி வீரர்கள் காளை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழி ஏற்றதையடுத்து வாடிவாசலில் இருந்து முதலில் கோயில் காளைகளும் அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகளும் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடி வாசலில் இருந்து சீறிவரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் அடக்கி வருகின்றனர்.ஜல்லிக்கட்டில் 1000 காளைகளும், 350 வீரர்களும் களம் காண்கின்றனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ஆவணங்கள் சரிபார்க்கபட்டு, உடற்தகுதியுள்ள காளைகளும், வீரர்களும் போட்டியில் களமிறங்கி வருகின்றனர்.
மேலும். வெற்றி பெறும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், சைக்கிள், கட்டில், பீரோ, மிக்ஸி, கிரைண்டர் உள்பட பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. போட்டியில் அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு முதலமைச்சர் சார்பில் கார் வழங்கப்பட உள்ளது. சிறப்பாக விளையாடி முதல் பரிசு பெறும் காளையின் உரிமையாளருக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் கார் வழங்கப்பட உள்ளது. போட்டியில் 2ம் இடம் பிடிக்கும் வீரருக்கு, காளை உரிமையாளருக்கும் தலா ஒரு பைக்குகள் பரிசாக வழங்கப்பட உள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டியில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க 2 எஸ்பிக்கள், 8 உதவி எஸ்பிக்கள், 29 டிஎஸ்பிக்கள், 60 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் ,வெளிநாட்டில் இருந்து சுற்றுலா பயணிகள் ,ஜல்லிக்கட்டு ரசிகர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் அலங்காநல்லூரில் குவிந்துள்ளனர்.