

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவோம், சரண் விடுப்பு தொகை ஒப்படைக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக அளித்து இருந்தது. ஆட்சி பொறுப்பு ஏற்று நான்கு ஆண்டுகள் ஆகும் நிலையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட எந்த ஒரு வாக்குறுதியையும் திமுக நிறைவேற்ற வில்லை. இதனை கண்டித்து ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் கூட்டு இயக்கமான ஜாக்டோ ஜியோ சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இன்று கூட்டு இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

