


மீனவர்களின் துயர் துடைக்க கச்சத்தீவை மீட்க வேண்டியது காலத்தின் கட்டாயம், இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் சூழலில், அதிமுக மீனவர் அணி நிர்வாகி பசிலியான் நசரேத் வலியுறுத்தி வருகிறார்.
அதிமுக மாநில மீனவர் அணி இணை செயலாளர் பசிலியான் நசரேத் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத் தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கச்சத்தீவை மீட்க நீதிமன்றத்திலேயே உரிமைப் போராட்டம் நடத்திய இயக்கம் அதிமுக. அந்த வகையில் அதிமுகவும் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதால் சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியது. கச்சத்தீவு மீட்கப்படுவது காலத்தின் கட்டாயம். காரணம், இப்போது கச்சத்தீவு இலங்கையின் வசம் இருப்பதால் தமிழக மீனவர்கள் அனுபவிக்கும் துயரங்கள் மிக அதிகம்.
தமிழக முதல்வர் கச்சத்தீவை மீட்க தமிழக சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தாலும், தமிழகத்தில் இருந்து, நாடாளுமன்றத்திற்கு இந்தியா கூட்டணி சார்பில் 39 எம்.பிக்களை தமிழக மக்கள் அனுப்பிவைத்தனர். அவர்கள் ஏன் பாராளுமன்றத்தில் மீனவர்கள் கைது விவகாரத்தைப் பேசவில்லை? பிரதான அரசியல் கட்சிகளில் அதிமுக மட்டுமே மீனவர்களுக்காக களத்தில் நிற்கிறது என்பதையும் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளேன்.
தமிழக மீனவர்கள் விவகாரத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டின் நிலையே, இப்போதும் தொடர்வது மிகவும் துயரமான விசயம். முன்னதாக கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும், 569 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது. அந்த ஒரே ஆண்டில் 73 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. அதில் 96 மீனவர்களுக்கு 6 மாதங்கள் முதல் இரு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டதும் 2024 ஆம் ஆண்டில் நடந்தது. இந்த ஆண்டிலும் இலங்கை கடற்படையின் அராஜகம் தொடர்வது அதிர்ச்சியளிக்கிறது. அதற்கு முழுக்காரணம் திமுக அரசின் மெத்தனப் போக்குதான்! தமிழகத்தில் திமுகவும், மத்தியில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் இருந்தபோதுதான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது.
அது மட்டுமின்றி இலங்கையில் தமிழக மீனவர்களின் நூற்றுக்கணக்கான படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு படகுதான் வாழ்வாதாரம். அதை மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு கச்சத்தீவை மீட்க நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும். கச்சத்தீவு இலங்கை வசம் இருப்பதால் தமிழக மீனவர்கள் இப்போது சொல்வண்ணா பெருந்துயரில் தவிக்கின்றனர். கச்சத்தீவை மீட்பதுடன், இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் அனைவரையும் மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

