• Thu. Jul 18th, 2024

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு திமுகவிற்கு சாதகமா ? பாதகமா ?

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் வேட்பாளர்கள் இறுதி செய்யும் பணியில் உள்ளனர்.

சமீபத்தில் பாஜக செய்த ஒரு சம்பவம் காரணமாக அதிமுக பாஜகவை கழட்டிவிட்டு தனியாக களம் காண்கிறது. இதே போல பாஜகவும் இந்த முறை தனித்து போட்டியிட்டு தங்களது செல்வாக்கை நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாய நிலையில் உள்ளது. அதனால் இந்த முறை அரசியல் களம் மிகவும் பரபரப்பாக 9 முனை போட்டியாக உள்ளது.

இந்நிலையில் திமுக இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு 21 மாநகராட்சியை தங்களுடையது என்று ஒரு மனக்கோட்டையை கட்டிக்கொண்டு உள்ளது. ஆம் , திமுக அரசு பொறுப்பேற்று கிட்ட தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் கடந்துவிட்டது. நீட் தேர்வில் ஆளுநருடன் மோதல் , டெல்லியில் குடியரசு தினவிழாவின் போது தமிழக ஊர்திகள் நிராகரிக்கபட்டது என பல செயல்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதிலடி கொடுத்தாலும், இது தேர்தல் களத்தில் எதிரொலிக்காது.

திமுக ஆட்சிக்கு வரும் முன்னரே வாயை கொடுத்து மாட்டிவிட்டது. முதல் கையெழுத்து நீட் விலக்கு, பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என தங்களது தேர்தல் அறிக்கையில் வானத்திற்கு பூமிக்குமாய் வாக்குறுதி கொடுத்து மாட்டிக்கொண்டனர்.

அதிமுக – பாஜக கூட்டணி முறிவினால் பாஜக பிராதனமாக எடுக்ககூடிய பிரச்சனை தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் சட்ட ஒழுங்கு பிரச்சனை கோயில்கள் இடிப்பு என மத ரீதியிலான பிரச்சனையை திமுக எதிர்ப்பு பிரச்சாரத்தை தான் முன்னெடுக்கும். இதனை திமுக தந்திரமாக கையாண்டாலும் சில விஷயங்கள் திமுகவிற்கு பாதகமாக முடியும் என்று தான் கள நிலவரங்கள் கூறுகின்றன.

முதல் பிரச்சனை குடும்ப பெண்களுக்கான மாதாந்திர உரிமைத்தொகை ரூ.1000 கிடப்பில் போடப்பட்டது.மேலும் நகைக்கடன் தள்ளுபடி விஷயத்திலும் ஏகப்பட்ட குளறுபடிகள் அரங்கேறியது.

ஜனவரியில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பு தர குறைவான முறைகேடு பிரச்சனை அதனை முதலமைச்சர் ஸ்டாலின் கையாண்ட விதம் இவை அனைத்துமே திமுகவிற்கு அதிருப்தி வாக்குகளாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். மேலும் பொங்கல் தொகுப்பில் தரக்குறைபாடு பிரச்சனை எழுந்த உடனே முதலமைச்சர் முக ஸ்டாலின் ரேஷன் கடையில் ஆய்வு செய்ய புறப்பட்டு சென்றவர். தொகுப்புகளை பிரித்து பார்த்து தரத்தினை சோதிக்காமல் அப்படியே முதல்வன் பட அர்ஜுன் பாணியில் கடைகளில் மட்டும் ஒரு விசிட் செய்து விட்டு சென்று விட்டார்.

இதனை தொடர்ந்து திமுகவின் கோட்டையாக கருதப்பட்ட சென்னையும் திமுகவிற்கு சற்று போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.முதலமைச்சரின் சொந்த தொகுதியில் இருந்த மக்கள் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி வெளியேற்றப்பட்டு வீடுகள் இடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சமீபத்தில் பெத்தேல்நகர் மக்கள் வீடுகளும் இடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அந்த மக்கள் வீதியில் இறங்கி போராடியது.உங்கள நம்பி தான் வாக்களித்தோம் அதுக்கு நீங்க காட்டுற விசுவாசம் இதுதானா என்று கேட்கும் கேள்விகள் திமுகவின் வெற்றி வாய்ப்பை குறித்து தான் கேட்கப்படுகிறது.

சேலம் தருமபுரி கோவை ஆகிய மூன்று பகுதிக்கு சிறப்பு கவனம் செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின் மற்ற பகுதிகளை தங்களது கட்டுபாட்டுக்குள் வைத்துகொள்ள மறந்துவிட்டார். மேலும் தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தை திமுக தலைமையிலான அரசு கையாண்ட விதம் கூட சொந்த கட்சியினரிடையே சற்று சல சலப்பை ஏற்படுத்தி உள்ளது.

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் அதிருப்தி ஓட்டுகள் திமுகவிற்கு சாதகமாக அமைந்து வெற்றிவாய்ப்பை உறுதி செய்தது. அதுபோன்று இந்த நகர்ப்புற தேர்தலிலும் அப்படி ஒரு மேஜிக் நடைபெற்றாக வேண்டிய சூழ்நிலையில் திமுக உள்ளது என்பது இப்போதைய கள நிலவரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *