மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஷில்பாவின் தாயாருக்கு மும்பை நீதிமன்றம் வாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் பர்ஹாத் அம்ரா என்பவர், பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது தந்தை சுரேந்திர ஷெட்டி, தாய் சுனந்தா, சகோதரி ஷமிதா என குடும்பத்தினருக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது, கடந்த 2015ஆம் ஆண்டு ஷில்பா ஷெட்டியின் பெற்றோர் தொழிலதிபரிடம் ரூ. 21 லட்சம் கடன் பெற்றுள்ளனர். ஆனால், அந்த கடனை அவர்கள் திருப்பி தரவில்லை என்பது புகார்.
இதுதொடர்பாக பர்ஹாத் அம்ரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நடைபெற்று வரும் நிலையில், இடையே ஷில்பா ஷெட்டியின் தந்தை சுரேந்திரா ஷெட்டி உயிரிழந்துவிட்டார். எனினும் தன்னிடம் வாங்கிய கடனுக்கு, சுரேந்திர ஷெட்டியின் வாரிசுகளான அவரது மனைவி மற்றும் இரு மகள்களும் பொறுப்பு என்று மனுவில் தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கை விசாரித்த பெருநகர மாஜிஸ்திரேட் ஆர்.ஆர்.கான், குற்றம்சாட்டப்பட்ட ஷில்பா ஷெட்டி, அவரது தாயார் சுனந்தா மற்றும் சகோதரி ஷமிதா ஆகியோருக்கு எதிராக சம்மன் அனுப்பினார். ஆனால், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மேலும் சம்மனை எதிர்த்து செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிபதி, ஷில்பா மற்றும் அவரது சகோதரி ஷமிதாவுக்கு எதிரான மாஜிஸ்திரேட்டின் உத்தரவை நிறுத்தி வைத்தார். ஆனால் அவரின் தாயாருக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. அந்த வகையில், மாஜிஸ்திரேட்டின் உத்தரவுபடி, சுனந்தா ஷெட்டி நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், அவருக்கு எதிராக வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.