• Thu. Apr 25th, 2024

18 கர்நாடக அரசு அதிகாரிகள் வீட்டில் ரெய்டு!

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டு சொத்து சேர்க்கும் அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படை போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூரு மாநகராட்சி அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படை போலீசார் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டு, வருமானத்துக்கு அதிகமாக சட்டவிரோதமாக சொத்து குவித்திருக்கும் அரசு அதிகாரிகள் பற்றி ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து, அந்த அதிகாரிகளை சில நாட்களாக திட்டமிட்டு போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், காலை 6 மணியளவில் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள புகார் அதிகம் பெற்ற அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்கள், அவர்களது உறவினர்களின் வீடுகளில் ஊழல் தடுப்பு படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

ஒட்டு மொத்தமாக 18 அரசு அதிகாரிகளின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 100 உயர் காவல் அதிகாரிகள் உள்பட 400-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

பெங்களூருவில் 3 அரசு அதிகாரிகளின் வீடுகளில் ஊழல் தடுப்பு படை போலீசார் சோதனை நடத்தினர். அதில், பெங்களூரு போக்குவரத்து துறையில் கூடுதல் கமிஷனராக பணியாற்றி வருபவர் ஞானேந்திரகுமார். இவருடைய வீடு, அலுவலகம் மற்றும் உறவினர் வீடு என 4 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது ஞானேந்திரகுமார் வீட்டில் இருந்து தங்க நகைகள், பணம், முக்கிய சொத்து பத்திரங்கள் சிக்கியதாக தெரிகிறது. இதுபோல், பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் நகர திட்ட அதிகாரியாக இருந்து வரும் ராகேஷ்குமார், தொழில்துறை மற்றும் வணிகத்துறையின் கூடுதல் இயக்குனராக பணியாற்றும் பி.கே.சிவக்குமார் ஆகியோரின் வீடுகளில் ஊழல் தடுப்பு படையினர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள், நகைகள், பணம் ஆகியவற்றை கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

பாகல்கோட்டை மாவட்டம் பாதாமியில் வனத்துறை அதிகாரியாக இருந்து வருபவர் சிவானந்த் பி.சரணப்பா சேடகி. இவரது வீட்டில் இருந்து ரூ.16 லட்சத்திற்கான பாண்டு பத்திரம், 4 கிலோ வெள்ளி, ஒரு கிலோ தங்க நகைகள், ரூ.20 லட்சம் ஆகியவற்றை ஊழல் தடுப்பு படையினர் கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் 3½ கிலோ சந்தன மரத்துண்டுகளும் அதிகாரி சிவானந்த் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டன. அதிகாரி சிவானந்த் உறவினர் வீட்டில் இருந்து ரூ.12 லட்சமும் சிக்கியதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *