• Fri. Apr 19th, 2024

மனைவி சம்மதமின்றி உறவு குற்றமா? – நீதிபதிகளின் குழுப்பமான தீர்ப்பு

ByA.Tamilselvan

May 12, 2022

மனைவியுடன் கட்டாய உறவு கொள்வது குறித்த விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் குழப்பம் நீடிக்கிறது.
மனைவி சம்மதமின்றி கணவன் வலியுறுத்தி ஈடுபடும் கட்டாய உறவை குற்றமாக்க கோரி, ஆஐடி பவுண்டேஷன், இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்டோர் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதிகள் ராஜீவ் ஷக்தர், ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு கடந்த 2011ஆம் ஆண்டு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தாம்பத்திய வல்லுறவு மேற்கத்திய நாடுகளில் குற்றமாக்கப்பட்டுள்ளது. அதற்காக கண்மூடித்தனமாக இந்தியாவும் பின்பற்ற வேண்டியதில்லை. மனைவியுடன் கட்டாய உறவை குற்றமாக்குவதற்கு முன், நமது நாட்டிற்கே உரிய எழுத்தறிவு, பெரும்பாலான பெண்களுக்கு இல்லாமல் இருக்கும் நிதி அதிகாரம், சமூக மனப்பான்மை, வேற்றுமைகள், ஏழ்மை ஆகியவற்றை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும், என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த ரிட் மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்கள் தரப்பு, எதிர் மனுதாரர்கள் தரப்பு வாதங்களை கேட்ட டெல்லி உயர்நீதிமன்றம், எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
இந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் 2 பேரும் முரண்பட்ட தீர்ப்பை கூறியுள்ளனர். மனு தொடர்பாக நீதிபதி ராஜீவ் ஷக்தர் வழங்கிய தீர்ப்பில், தாம்பத்ய வல்லுறவு குற்றமாகாது என விலக்கு அளிக்கும் பிரிவு அரசமைப்பு சட்டத்திற்கு புறம்பானது, என்றார்.
நீதிபதி ஹரிசங்கர் முரண்பட்டு, தாம்பத்ய வல்லுறவு குற்றமாகாது என விலக்கு அளிக்கும் பிரிவு அரசமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது இல்லை. புரிந்துகொள்ளத்தக்க வேறுபாட்டின் மூலம் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, என்று தனது தீர்ப்பில் தெரிவித்தார். மேலும் இந்த முரண்பட்ட தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் மனுதாரர்களுக்கு அனுமதி அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *