நவீன ஹைட்ராலிக் கேரவன் வாகனம் தமிழகத்திலே முதன் முறையாக அறிமுகம்.
ஜல்லிக்கட்டு வாடிவாசலில் பாய தயாராகும் செந்தில் தொண்டமானின் டாப் 10 காளைகள். பொம்மைகள் வைத்து மாடுகளுக்கு முட்டும் பயிற்சி.
தைப்பொங்கல் திருநாளை தொடர்ந்து நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு காளைகள் தயாராகி வருகின்றன. இலங்கை முன்னாள் ஆளுநர், அமைச்சருமான செந்தில் தொண்டமான் வளர்க்கும் காளைகள் போட்டிக்கு தயாராகும் வீரர்களைப் போலவே ஜல்லிக்கட்டுக்கு தயாராகி வருகின்றன. ஜல்லிக்கட்டு போட்டிக்கு சென்றுவர ஹைட்ராலிக் கேரவன் உருவாக்கி தனித்தனி அறைகளில் ஃபேன், ஏர்கூலர், வசதியுடன் கூடிய தங்குமிடம் என அனைத்து வசதிகளோடு பராமரிக்கப்பட்டு தீவிர பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த செந்தில் தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆவார். ஜல்லிக்கட்டுமீது ஆர்வம் கொண்ட இவர் சிவகங்கை மாவட்டம் ஆள விளாம்பட்டி அருகே தென்னந்தோப்பில் காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த டாப் 10 காளைகள் ஒவ்வொன்றும் மாடுபிடி வீரர்களைக் களத்தில் நின்று மிரட்டும்.
காளைகளுக்கு என தனி அறை ஏ.சி கேரவன், சிறந்த பயிற்சி ஆரோக்கியமான உணவுகள் என இந்த வீரமிகு காளைகளை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே நினைத்துப் பராமரித்து வருகிறார் செந்தில் தொண்டமான். ஆளவிளாம்பட்டி கிராமத்தில் உள்ள அவரது தோப்பில் தமிழகம் மற்றும் வெளி மாநில காளைகளை வாங்கி பராமரித்து வருகிறார். இப்படி வளரும் இவரது காளைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று வரை நடைபெற்ற எல்லா ஜல்லிக்கட்டு போட்டிகளில் கார் புல்லட் தங்கக் காசுகள் என பரிசுகளை குவித்து நம்பர் ஒன் காளைகளாக திகழ்ந்து சிவகங்கை சீமையின் வீரத்தை பறை சாற்றி வருகிறது.
களத்தில் கொம்புகளையும், உடல் கம்பீரத்தையும் பார்த்ததும் பின்வாங்கச் செய்யும் “பீமா பாகுபலி, பேட்டகாளி, சோழன், அணில், செம்மல் கரிசல் ,கரிகாலன், புல்லட் செம்மறை” என இவர் வளர்க்கும் காளைகளுக்கு செல்ல பெயரும் உண்டு.வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்வதில் அசாத்திய திறமை கொண்டவை இவை. பெருத்த திமில், கூரிய கொம்புகள், ராஜநடையோடு கம்பீரமாக வலம் வரும் , உடல் வலிமைக்காக வழக்கமான உணவுகளை தவிர்த்து பேரிச்சம் பழம், பருத்தி விதை, புண்ணாக்கு, முட்டை, கோதுமை தவிடு போன்ற ஊட்டமளிக்கும் உணவுப் பொருட்களை வழங்கி போட்டிக்கு தயார்படுத்தி வருகின்றனர். மேலும் காளைகளுக்கு தினமும் நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது . போட்டிக்கு தயாராகும் வீரர்களைப் போலவே ஒவ்வொரு காளையும் ஜல்லிக்கட்டுக்கு தயாராகி வருகிறது.
நவீன ஹைட்ராலிக் கேரவன் தமிழகத்திலே முதன் முறையாக அறிமுகம் படுத்தியுள்ளார். இந்த வாகனம் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் தனித்தனி அறைகளில் ஃபேன், ஏர்கூலர், வசதியுடன் கூடிய தங்குமிடம் என இந்த காளைகளுக்கு அனைத்து வசதிகளோடு பராமரிக்கப்பட்டு தீவிர பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்,ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்த காளைகள் தான் தை மாத ஆட்டநாயகன்கள்.