

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரித்து, கரியமில வாயுவை கட்டுப்படுத்தும் இந்தியாவின் பருவ நிலை கொள்கைக்கு, சர்வதேச நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடந்த பருவநிலை தொடர்பான மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, 2070ல் கரியமில வாயு வெளியேற்றத்தை பூஜ்யத்திற்கு குறைக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ‘இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் தற்போதைய, 450 கிகா வாட்டில் இருந்து 2030ல் 500 கிகா வாட் ஆக அதிகரிக்கப்படும்: கரியமில வாயு 100 கோடி டன் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் தெரிவித்தார்.
உலகம் வெப்பமயமாவதை தடுக்க, பிரதமர் மோடி அறிவித்த இந்த திட்டங்களுக்கு சர்வதேச நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இது குறித்து சர்வதேச நிதியத்தின் தகவல் தொடர்பு துறை இயக்குனர் கெரி ரைஸ் கூறியதாவது:புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிகரித்து, கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க இந்தியா அறிவித்துள்ள திட்டங்களை வரவேற்கிறோம்.
உலகில் கரியமில வாயுவை அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளில், இந்தியாவும் அடங்கியுள்ளது. மின் உற்பத்திக்கு பெரிதும் நிலக்கரியை சார்ந்துள்ள இந்தியா, உலகம் வெப்பமயமாவதை தடுக்க, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் குறிப்பிடத்தக்க முதலீடுகளை மேற்கொள்வது பாராட்டத்தக்கது. இந்தியாவை பின்பற்றி இதர நாடுகளும் காற்று மாசை குறைத்து, உலகம் வெப்பமயமாவதை தடுக்க முன் வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
