நாடு முழுவதும் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதைக் கண்டித்து குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாதர் சங்க பெண்கள் கேஸ் சிலிண்டர் மீது மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து வேதனையை வெளிப்படுத்தும் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை என்பது உச்சத்தை தொட்ட நிலையில் சாமானிய பொதுமக்கள் மற்றும் அன்றாட வேலை செய்து தன் வாழ்க்கை நிலை நடத்திவரும் மக்கள் பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை எளியோரின் வாழ்வாதாரம் பாதிப்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 350 ரூபாய்க்கு விற்று வந்த சமையல் எரிவாயு தற்போது 1050 ரூபாய்க்கு விற்று வருகிறது.
நடுத்தர மக்கள் இந்த நவீன காலகட்டத்தில் மீண்டும் பழைய விறகு அடுப்புக்கு செல்வதாக வேதனை அடைந்துள்ளனர். இதுபோன்ற அநியாய விலை உயர்வினை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசை கண்டித்து குமரி மாவட்ட கூட்டுக்குழு பெண்கள் அமைப்பு சார்பாக குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கேஸ் சிலிண்டர் மீது மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து கண்ணீர் மல்க தங்களது வேதனையை வெளிப்படுத்தும் நூதன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.