நாசாவின் விண்வெளி பயண திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 10 பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் மேனன் இடம் பெற்றுள்ளார்.
நாசா நிலவு, செவ்வாய் கிரகம், சர்வதேச விண்வெளி நிலையம் ஆகியவற்றிற்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்துவருகிறது. மனிதர்கள் மட்டுமின்றி
ஆர்பிட்டர்கள், ரோவர்கள் மூலமாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தற்போது மீண்டும் நிலவு, செவ்வாய் கிரகம், சர்வதேச விண்வெளி நிலையம் ஆகியவற்றிற்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு பணிகளை மேற்கொள்ள நாசா திட்டமிட்டுள்ளது. இதற்காக விண்வெளி வீரர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணிக்காக சுமார் 12 ஆயிரம் பேர் விண்ணப்பத்திருந்தனர்.
அவ்வாறு விண்ணப்பித்தவர்களில் இருந்து தகுதி வாய்ந்த 6 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் என மொத்தம் 10 பேரை நாசா தேர்வு செய்துள்ளது. இவர்கள் அனைவருக்கும் அடுத்த 2 ஆண்டுகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விண்வெளியில் நடப்பது, சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணி செய்வது, டி-38 விமானத்தை இயக்குவது, ரஷ்ய விண்வெளி வீரர்களுடன் தொடர்பு கொள்வதற்காக ரஷ்ய மொழியை கற்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் இவர்களுக்கு அளிக்கப்பட உள்ளன.
இந்த 10 பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான 45 வயது அனில் மேனன் என்பவரும் தேர்வாகியுள்ளார். இவர் அமெரிக்க விமானப்படையில் லெப்டினட் கர்னலாக பணியாற்றி வருகிறார். இவரது பெற்றோர் இந்தியா மற்றும் உக்ரைன் நாடுகளை பூர்வீகமாக கொண்டவர்கள் ஆவார்.