புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர் வேல்முருகன். இவர் காவல் கண்காணிப்பு அலுவலகம், நீதிமன்றம், சிறைச்சாலை, பாதுகாப்பு பெட்டகங்கள் அறை, ஆகியவற்றில் பணிபுரிந்து வந்தவர்.

இதேபோன்று வேல்முருகன் கடந்த சில நாட்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் மூன்று காவலர்கள் பணி செய்யும் இடத்தில் தேர்தல் பணிகள் காரணமாக இரண்டு காவலர்களுக்கு மட்டும் பணி ஒதுக்கியதாக கூறப்படுகின்றது. இதனால் ஓய்வில்லாமல் பணி செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் வேல்முருகன் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றைய முன்தினம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வேல்முருகன் விடியற்காலை கழிவறைக்கு சென்று வரும் வழியில் மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.
அப்பொழுது மருத்துவர்கள் பரிசோதித்து தலை பகுதியில் மூளை நரம்பில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக மேல் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதனை அடுத்து ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் வேல்முருகன் பலத்த ரத்த கசிவு ஏற்பட்டு மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் சக காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வேல்முருகன் பணி சுமை குறித்து பேசிய ஆடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது இது குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.



