

மேற்கு வங்க மாநிலத்தில் தெற்கு டம்டம் நகராட்சி தேர்தல் வருகிற 27ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது.
அதாவது மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், டம் டம் நகராட்சியின் ஒன்பதாம் வார்டில், திரிணமுல் சார்பில் சுர்ஜித் ராய் சவுத்ரி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த வார்டு பெண்களுக்கு என அறிவிக்கப்பட்டதால், கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலில், சுர்ஜித் ராய் சவுத்ரியின் மனைவி ரிதா ராய் சவுத்ரி பெயர் இடம் பெற்றது.
இதையடுத்து, ரிதா ராய் தேர்தல் பணிகளை துவக்கினார். இதற்கிடையே, கட்சியின் இரண்டாவது வேட்பாளர் பட்டியலில், ஒன்பதாம் வார்டு தும்பா தாஸ் கோஷ் என்பவருக்கு ஒதுக்கப்பட்டது. சுர்ஜித் ராய் சவுத்ரி 10வது வார்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், கட்சி தன்னை வேட்பாளராக அறிவித்துவிட்டு, பின் வேறொருவருக்கு வழங்கியதை ரிதா ராய் ஏற்க தயாராக இல்லை. இதனால், வேட்புமனுவை வாபஸ் பெற மறுத்த அவர், ஒன்பதாம் வார்டில் சுயேச்சையாக நிற்கப்போவதாக அறிவித்தார்.
இதற்கு கணவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கட்சி தலைமை கூறுவதை ஏற்கதான் வேண்டும் என அவர் கூறியுள்ளார். ஆனால் இதனை ஏற்க மறுத்த ரிதா ராய் தன் 3 வயது மகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதில் கோபமடைந்த சுர்ஜித் ராய் மனைவிக்கு விவாகரத்து, ‘நோட்டீஸ்’ அனுப்பினார்.
இது குறித்து நேற்று முன்தினம் சுர்ஜித் ராய் கூறும்போது, ‘கட்சி வேட்பாளரை எதிர்த்து மனைவி போட்டியிட்டால், கட்சியுடன் நான் எப்படி இணக்கமாக செயல்பட முடியும்’ என கேள்வி எழுப்பினார். விவாகரத்து பிரச்னை குறித்து ரிதா ராய் கூறுகையில், நோட்டீசை பெற்றுக் கொண்டேன். இது, நீதித்துறை தொடர்பான பிரச்னை என்பதால், இப்போதைக்கு கருத்து கூற விரும்பவில்லை என்றார்.