• Thu. Apr 25th, 2024

சுதந்திர ரயில் நிலைய வார விழா இன்று துவங்குகிறது

ByA.Tamilselvan

Jul 18, 2022

இந்தியாவின் 75 சுதந்திரதினவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒருபகுதியாக வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் சுதந்திர ரயில் நிலைய வார விழா இன்று நடைபெறவுள்ளது
இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா வருகிற ஆகஸ்ட் 15 அன்று கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக கடந்த ஓராண்டாக இந்தியா முழுவதும் சுதந்திர அமுதப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுதந்திரப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களை நினைவுபடுத்தும் வகையில் “சுதந்திர ரயில் நிலையம் மற்றும் ரயில்” என்ற விழா நடைபெற இருக்கிறது.
மதுரை கோட்டத்தில் சுதந்திர போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட ரயில் நிலையம் வாஞ்சி மணியாச்சி ஆகும். இந்த ரயில் நிலையத்தில் ஆங்கிலேய அரசுக்கு எதிரான சுதந்திரப் போரில் கலெக்டர் ஆஷ் துரை என்பவரை சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றார். அந்தக் காலத் திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த செங்கோட்டையில் ரகுபதி ஐயர் மற்றும் ருக்மணி அம்மாளுக்கு 1886 ஆம் ஆண்டு சங்கரன் ஐயர் மகனாகப் பிறந்தார். இவர்தான் பின்னாளில் வாஞ்சிநாதனாக மாறி சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார். இவர் தனது பள்ளி படிப்பு மற்றும் உயர் கல்வியை செங்கோட்டையில் பயின்றார். இவர் திருவாங்கூர் சமஸ்தானத்தில் அரசு ஊழியராக பணியாற்றினார். இவர் மனைவி பெயர் பொன்னம்மாள். இவர் அரசு ஊழியராக இருந்தபோது 1900 ஆம் ஆண்டுகளில் பாரதமாதா இயக்கத்தில் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். சுதந்திரப் போராட்ட தியாகிகள் வ.உ. சிதம்பரம் பிள்ளை, நீலகண்ட பிரம்மச்சாரி, சுப்பிரமணிய சிவா, சுப்ரமணிய பாரதி ஆகியோரை பின்பற்றி அவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார். 1911 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட கலெக்டராக ராபர்ட் வில்லியம் ஆஷ் என்பவர் இருந்தார். அவர் பாரதிய கப்பல் கம்பெனி என்ற பெயரில் தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே முதல் முதலில் கப்பல் இயக்கிய வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு மிகுந்த தொல்லை கொடுத்தார். பின்பு அவரை கைது செய்து சிறையில் அடைத்தார். உள்ளூர் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க ஆர்வம் இல்லாமல் இருந்தார். எனவே அவருக்கு தக்க பாடம் புகட்ட வாஞ்சிநாதன் முடிவு செய்தார். 1911 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் நாள் கொடைக்கானல் செல்வதற்காக தனது குடும்பத்துடன் கலெக்டர் ஆஷ் போட் மெயில் ரயிலில் திருநெல்வேலியில் இருந்து பயணத்தை துவக்கினார். ரயில் காலை 10.48 மணிக்கு மணியாச்சி ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. ரயில் நிலையத்தில் காத்திருந்த வாஞ்சிநாதன் ரயில் பெட்டிக்குள் சென்று பெல்ஜிய தயாரிப்பு துப்பாக்கியை எடுத்து கலெக்டர் ஆஷின் நெஞ்சில் சுட்டார். அவர் அந்த இடத்திலேயே மரணமடைந்தார். பின்பு வாஞ்சிநாதன் நடைமேடையில் உள்ள கழிப்பறைக்குள் சென்று தாளம் சுட்டுக் கொண்டு மரணம் அடைந்தார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி ஆங்கிலேய அரசை கலக்கமடைய செய்தது. இந்த நிகழ்ச்சி நடைபெற்ற மணியாச்சி ரயில் நிலையம் 1988 ஆம் ஆண்டு வாஞ்சி மணியாச்சி என பெயர் மாற்றம் பெற்றது. இந்த ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுதந்திர போராட்ட நிகழ்வை போற்றும் வகையில் விழா நடத்த ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது.
எனவே வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் ஜூலை 23 வரை சுதந்திர சின்னம் வார விழா அனுசரிக்கப்பட இருக்கிறது. இந்த வார விழாவின் துவக்க விழா ஜூலை 18 திங்கட்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் மணியாச்சி ரயில் நிலையத்தில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் துவக்கி வைக்க இருக்கிறார். வாஞ்சிநாதன் அவர்கள் பற்றிய புகைப்படக் கண்காட்சி, புகழஞ்சலி, படக்காட்சி ஒளிபரப்பு, ஓரங்க நாடகம் ஆகியவை நடைபெற இருக்கின்றன. வாஞ்சிநாதன் அவர்களின் இளைய சகோதரருடைய மகன் ஹரிஹரசுப்பிரமணியம் மற்றும் அவரது மகன் நெல்லை பள்ளி ஆசிரியர் வாஞ்சிநாதன் ஆகியோர் விழாவில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *