தமிழகத்தில் உள்ள நான்கு தனியார் நிறுவனங்களின் பால் விலை உயர்வு அமலுக்கு வந்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பால், தயிர் விலையை உயர்த்தியுள்ள திருமலை, ஹெரிடேஜ், டோட்லா மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய நான்கு நிறுவனங்களும் மாநிலத்தின் மொத்த பால் சந்தை பங்கில் 45 சதவிகிதத்துக்கு மேல் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு லிட்டர் பால் விலை ரூ.2 முதல் ரூ.4 வரையும், தயிர் மற்றும் மோரின் விலை லிட்டருக்கு ரூ.4 முதல் 6 வரையும் உயர்த்தியுள்ளன. அதே சமயம் பால் கொள்முதல் விலையை எந்த நிறுவனமும் உயர்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருமலை நிறுவனத்தின் பால் ஒரு லிட்டர் ரூ.58ல் இருந்து ரூ.62 ஆகவும், முழு க்ரீம் பால் 1 லிட்டர் ரூ.66ல் இருந்து ரூ.70 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் திருமலை நிறுவனத்தின் 450 கிராம் தயிர் ரூ.4 உயர்த்தப்பட்டு ரூ.36 ஆகவும், 200 மி.லி. மோர் பாக்கெட் ரூ.4 உயர்த்தப்பட்டு ரூ.10 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஹெரிடேஜ் நிறுவனத்தின் 457 மி.லி. பால் பாக்கெட் ரூ.31ல் இருந்து ரூ.33ஆகவும், 950 மில்லி பால் ரூ.62ல் இருந்து ரூ.64 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
டோட்லா நிறுவனத்தின் முழு க்ரீம் பால் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி ரூ.70 ஆகவும், சாதாரண தரப்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்பட்டு ரூ.62 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஸ்ரீரங்கம் பால் நிறுவனம் தரப்படுத்தப்பட்ட பால் விலையை லிட்டருக்கு ரூ.5ம், முழு க்ரீம் பால் விலையை லிட்டருக்கு ரூ.4 ம் உயர்த்தியுள்ளது.