தமிழகத்திற்கு ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக முதற்கட்டமாக ரூ.945 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த நவம்பர் 30-ம் தேதி கரையை கடந்தது. இதன் தாக்கத்தால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. பல பகுதிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், வீடுகள், விவசாய நிலங்கள் சேதம் அடைந்தன. ‘பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் தற்காலிக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.2,475 கோடி தேவை. இடைக்கால நிவாரணமாக ரூ.2,000 கோடியை உடனே விடுவிக்க வேண்டும். சேதம் குறித்து விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள மத்திய குழுவை விரைவில் அனுப்ப வேண்டும்’ என பிரதமர் மோடிக்கு முதல்வர் கடந்த 2-ம் தேதி கடிதம் எழுதினார்.
இதற்கிடையே, முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, புயல் பாதிப்புகளை கேட்டறிந்ததுடன் தமிழகத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று உறுதி அளித்தார். இந்நிலையில், புயல் நிவாரண நிதியாக தமிழகத்துக்கு ரூ.944.80 கோடி வழங்கப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மாநில பேரிடர் நிவாரண நிதியில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.944.80 கோடி விடுவிக்கப்படுகிறது. தமிழகம், புதுச்சேரிக்கு மத்திய குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய குழுவின் அறிக்கைக்கு பிறகு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதல் நிதி வழங்கப்படும். இந்த ஆண்டில் இதுவரை 28 மாநிலங்களுக்கு ரூ.21,718 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதி ஒதுக்கீடு
