திருமயம்-31- திருமயம், அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா ஆகஸ்ட்-31 (திங்கட்கிழமை) நடைபெற்றது.

விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் கல்லூரி முதலாமாண்டு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வெண்ணிலா வரவேற்றார். முதல்வர் டாக்டர் குழ.முத்துராமு முன்னிலை வகித்துப் பேசினார். கல்லூரி தாளாளர் டாக்டர் பிச்சப்பா மணிகண்டன் , இயக்குநர் ம.பிச்சப்பா, செயலாளர் மு.விஸ்வநாதன் , புலத்தலைவர் டாக்டர் முருகப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு விருந்தினராக பட்டிமன்றப் பேச்சாளர் பேரா.முனைவர் மனோன்மணி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியாதாவது :
ஓவ்வொரு மாணவரும் பெற்றோரையும், ஆசிரியர்களையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி மதிக்க கற்றுக் கொண்டாலே நாம் வாழ்வில் முன்னேற்றம் அடைந்து விடலாம். தம்முடைய பிள்ளைகளை கல்லூரிகளில் சேர்ப்பது என்பது ஒவ்வொரு பெற்றோரின் பெருங்கனவு. அவர்களுடைய வலிகளையும், தியாகங்களையும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு பிள்ளைகளின் பொறுப்பு. நம் தேசம் வல்லரசாக வேண்டுமென்றால் இளைய தலைமுறையினர் சிறப்பாக நடந்து கொள்ள வேண்டும்.
சாதிப்பதற்கு வயது ஒருபோதும் தடை இல்லை. படிக்கின்ற காலத்தில் தவறான திசைகளில் கவனம் செலுத்தி வாழ்க்கையை வீணாக்கிவிடாதீர்கள். படிப்பைத் தவிர மற்ற துறைகளில் இருக்கும் உங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். திறமையானவர்களைத்தான் இந்த உலகம் தேடிக்கொண்டிருக்கிறது.
புதிய சூழலில் நல்ல நட்புகளை தேடிக்கொள்ளுங்கள். சாலைவிதிகளைப் பின்பற்றி இரு சக்கர வாகனத்தில் கவனமாகப் பயணம் செய்யுங்கள் .
இந்த இளம் வயதில் தேடித்தேடி கற்றுக் கொள்ளுங்கள். தேடல் இருக்கும்வரை உங்களுக்கான ஞானம் வளர்ந்து கொண்டே இருக்கும். சமூக ஊடகங்களும் புதிய புதிய தொழில்நுட்பங்களும் நம்மை மேம்படுத்திக் கொள்வதற்காகத்தானே தவிர நம்முடைய காலத்தையும் நேரத்தையும் வீணடிப்பதற்காக அல்ல என்பதைப் புரிந்துகொண்டு பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கான நிர்வாகத்தின் சார்பில் கல்விக் கட்டணச் சலுகை உறுதியளிப்புக் கடிதங்கள் வழங்கப்பட்டன. நிறைவாக சிவில் பொறியியல் துறைத் தலைவர் முனைவர் ஜானகி நன்றி கூறினார். விழாவில் அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் , பெற்றோர்கள், மாணவ,மாணவியர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




