• Sun. Apr 28th, 2024

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்..,அண்ணாமலையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம்..!

Byவிஷா

Jun 13, 2023

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை கண்டித்து இன்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும், அதன் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில், “தமிழகத்தின் பல்வேறு நிர்வாகங்கள் ஊழலில் திளைத்தது. முன்னாள் முதல்-அமைச்சர் (ஜெயலலிதா) நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். அதனால்தான் தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக மாறிவிட்டது. அது ஊழலில் முதல் இடம் என்பதை என்னால் சொல்ல முடியும்” என்று கூறியிருந்தார்.
அண்ணாமலையின் இந்த கருத்து அ.தி.மு.க.வினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் விமர்சனத்துக்கு அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவகலத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அண்ணாமலைக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பினர். மேலும் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க பாஜக தலைமைக்கு வலியுறுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கண்டனம் தெரிவித்து அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பொது வெளியில் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களை உள்நோக்கத்துடன் அண்ணாமலை பேசி உள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு, தொண்டர்களிடையே மன வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வாஜ்பாய், அத்வானி, பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தேசிய தலைவர்கள் அனைவரும் ஜெயலலிதா மீது மதிப்பு வைத்துள்ளார்கள். அண்ணாமலை திட்டமிட்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேசியுள்ளார். அண்ணாமலையின் பேச்சினை வன்மையாக கண்டித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1998 ல் பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வர அதிமுக தான் காரணம். 120 ஆண்டுகளுக்கு பின் 4 சட்டமன்ற உறுப்பினர்களை பா.ஜ.க பெற அதிமுக தான் காரணம்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *