• Thu. May 9th, 2024

அமித்ஷா பேச்சு…சீட்களை முடிவு செய்வது நாங்கள் தான்: செம்மலை பதிலடி

ByA.Tamilselvan

Jun 11, 2023

2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்ற அமித் ஷாவின் பேச்சு குறித்து அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை பரபர கருத்தை தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் போட்டியிடுவோம் என முன்னர் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறி வந்தார். அதற்கு அதிமுக தலைவர்கள், அண்ணாமலை கூட்டணி பற்றியும், சீட் பற்றியும் தீர்மானிக்கும் இடத்தில் இல்லை, பாஜக தேசிய தலைமைதான் சீட் பற்றி முடிவெடுக்கும் என்றனர்.
ஆனால், இப்போது அமித் ஷாவே தமிழ்நாட்டில் பாஜக 25 தொகுதிகளில் போட்டியிடுவதே இலக்கு எனத் தெரிவித்திருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அமித் ஷாவின் கருத்துக்கு அதிமுகவின் ரியாக்‌ஷன் என்ன என்பது கவனிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமித் ஷா பேச்சு தொடர்பாகப் பேசிய அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செம்மலை, “ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு இலக்கு இருக்கும். ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தலில் எத்தனை இடங்களில் போட்டியிடலாம் என்ற விருப்பம் இருக்கும். நாளை தேர்தல் நெருங்கும்போது, கூட்டணி கட்சிகள் அமர்ந்து பேசும்போதுதான் யார் யாருக்கு எத்தனை சீட்கள், எந்தெந்த சீட்கள் என்பது முடிவாகும். எனவே, இப்போது சொல்வது கட்சியின் விருப்பம்தானே ஒழிய முடிவாக இருக்காது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். தமிழ்நாட்டில் அமைக்கப்படும் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை எடப்பாடி பழனிசாமி மேல்மட்ட தலைவர்களை ஆலோசித்த முடிவெடுப்பார்.
சிறிய கட்சிகளுக்கு கூட அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். அதை குறை சொல்ல முடியாது. தேசியக் கட்சி என்ற அடிப்படையில் பாஜகவுக்கு அதிக இடங்களில் போட்டியிடும் விருப்பம் இருக்கும். பாஜகவில் இருக்கும் தலைவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக அமித் ஷாவின் விருப்பம் இருக்கும்.
தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி கட்சிகளின் பலத்தை பொறுத்து, மக்களிடையே உள்ள செல்வாக்கைப் பொறுத்து அவர்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்குவதா அல்லது 2 தொகுதிகள் ஒதுக்குவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும். இப்போது 25 தொகுதிகளில் வெற்றி பெறுவதாக பேசுவது வெறும் யூகமாகவே இருக்கும்.
நாடாளுமன்றத் தேர்தல் என்பதால், ஒரு தேசியக்கட்சியோடு கூட்டணி அவசியம் என்று நாங்கள் கருதுகிறோம். திமுக, தேசிய அளவில் காங்கிரஸோடு கூட்டணி வைத்திருக்கிறது. எங்களுக்கும் தேசிய கட்சியோடு உறவு தேவை. எனவே, பாஜக தான் காங்கிரஸுக்கு சமநிலையில் உள்ள தேசியக்கட்சியாக எங்களுக்கு இருக்கிறது.
அதிமுகவின் கொள்கைக்கும், பாஜகவின் சித்தாந்தத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் தலைவராக இருக்கிறார். நாங்கள் கேட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார். அந்த அடிப்படையில் பாஜகவுடன் கூட்டணியைத் தொடர்கிறோம்.
அண்ணாமலை 25 சீட்களில் வெற்றி பெறுவோம் எனச் சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து, தேசிய தலைமைதான் முடிவெடுக்கும் என சொன்ன அதே பதில் தான் இப்போதும். அமித் ஷா என்ற தனியொரு தலைவர் முடிவெடுக்க முடியாது. அதற்கு மேலே பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் நட்டா, பாஜக உயர்மட்டக் குழு இருக்கிறது.
அவர்கள் எல்லோரும் சேர்ந்து முடிவு செய்து சொல்வதுதான் பாஜக தலைமையின் முடிவு. உள்துறை அமைச்சர் அமித் ஷா எவ்வளவு பவர்ஃபுல் தலைவராக இருந்தாலும், அவர் தனியாகச் சொல்லும் கருத்துகள் பாஜக தலைமையின் கருத்து ஆகாது.” எனத் தெரிவித்துள்ளார் செம்மலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *